சென்னை,
இயக்குனர்கள் தங்கள் படங்களில் சில காட்சிகளை சூடுபிடிக்கும் விதமாக டாப் நடிகர்களை சிறிது நேரம் நடிக்கவைத்து படத்தின் சுவாரசியத்தை கூட்டுகிறார்கள். இது இப்போது கேமியோ ரோல் என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பாலிவுட்டில் சில நட்சத்திரங்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். அதன்படி, அந்த நட்சத்திரங்கள் யார்? எந்த படத்தின் தோன்றினர் என்பதை தற்போது காண்போம்.
ஸ்ட்ரீ 2
இந்த ஆண்டு ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், வருண் தவான் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் ஸ்ட்ரீ 2. இதில், யாரும் எதிர்பாராதவிதத்தில் அக்சய் குமார் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் கதைக்கு ஒரு அற்புதமான திருப்பத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.
கல்கி 2898 ஏடி
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வெளியான படம் கல்கி 2898 ஏடி. இதில், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இவ்வாறு பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தநிலையில், ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் ராம் கோபால் வர்மா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
சிங்கம் அகெய்ன்
ரோஹித் ஷெட்டி இயக்கிய சிங்கம் அகெய்ன் படத்தில் சுல்புல் பாண்டேவாக சல்மான் கான் மறக்கமுடியாத கேமியோவில் நடித்தார். இரண்டு நிமிடங்கள் அவர் தோன்றி இருந்தார். அஜய் தேவ்கன், அக்சய் குமார், ரன்வீர் சிங், டைகர் ஷெராப், கரீனா கபூர், தீபிகா படுகோன், அர்ஜுன் கபூர் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்த இந்தப் படத்தில், சல்மானின் கேமியோ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
முஞ்யா
பிரபல பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சர்போதார் இயக்கத்தில் வெளியான இந்தி படம் "முஞ்யா". இதில், ஷர்வரி வாக், அபய் வர்மா, மோனா சிங் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் இதில், வருண் தவான் பாஸ்கராக ஒரு மறக்கமுடியாத கேமியோவில் நடித்திருந்தார்.
பேட் நியூஸ்
ஆனந்த் திவாரி இயக்கத்தில் விக்கி கவுசல், திரிப்தி டிம்ரி நடிப்பில் வெளியான படம் பேட் நியூஸ். இதில், யாரும் எதிர்பாராத விதமாக அனன்யா பாண்டே கேமியோவில் நடித்திருந்தார்.