
சென்னை,
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 27). இவர் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த 3 மாதங்களாக காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி அந்த கோவிலுக்கு வந்த நிகிதா என்பவரின் காரில் இருந்த 10 பவுன் நகை மாயமானதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்குமாரை போலீசார் விசாரித்தனர்.
மறுநாள் 28-ந்தேதியன்று அவரது சகோதரர் நவீன், காரை இயக்கிய ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரை திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். நகை மாயமானது பற்றி தெரியாது என்று கூறியதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் விடுவித்துவிட்டனர்.இந்த நிலையில் அஜித்குமாரை கோவிலுக்கு பின்புறமுள்ள கோசாலை பகுதியில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் அஜித்குமாரை தடியால் சரமாரியாக அடித்தனர். இதில், அஜித்குமார் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை சிவகங்கை மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் அன்று இரவு உறவினர்களுக்கு போலீசார் போன் மூலம் பேசி, அஜித்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசாரால் அஜித்குமார் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அஜித்குமாரை தாக்கிய தனிப்படை போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்புவனம் இளைஞர் போலீசாரின் காவலில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின் பேரில் நீதி விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். கடந்த 1 ஆம் தேதி முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருந்த நிலையில், இன்று இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விரைவில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.