
மண்டலே,
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மண்டலே நகரில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மியான்மரை உலுக்கி எடுத்தது. தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே நகரங்கள் உருக்குலைந்தன. பெரிய அணைக்கட்டு உடைந்தது. பழமையான அரண்மனை ஒன்றும் சேதம் அடைந்தது. வானுயர்ந்த பல கட்டிடங்கள் சரிந்து விழுந்து மக்களை விழுங்கியது. முதல் நாளிலேயே 150-க்கு மேற்பட்டவர்கள் பலியானதாக அறியப்பட்ட நிலையில் மறுநாள் பலி எண்ணிக்கை 1650-ஐ தாண்டியது. 3,400-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தோர் எண்ணிக்கை 3,900ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை எட்டும் என்று சர்வதேச ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியர்களை மீட்கும் பணி 3 நாட்களை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நன்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் டிரோன்கள் உதவியுடன் இரவு பகலாக மீட்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் உடைந்துபோன கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் உயிரை பணையம் வைத்து மீட்பு படையினர் தங்களது கைகளால் கட்டிட குவியல்களை அகற்றி வருகின்றனர்.
பொதுமக்கள் குடிநீர் -மின்சாரம் வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தொலைதொடர்பு துறை துண்டிக்கப்பட்டுள்ளது. பாலங்கள், ரோடுகள் அனைத்தும் சின்னாபின்னமாகி கிடக்கின்றன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். ஏராளமானவர்கள் நிவாராண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார், தாய்லாந்து நாட்டிற்கு இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.