
நேபிடாவ்,
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மண்டலே நகரில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மியான்மரை உலுக்கி எடுத்தது
பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. ஏராளமானவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து முடங்கியது. நாட்டின் முக்கிய அணை, பழமையான அரண்மனை, விமான நிலையங்களும் சேதங்களை எதிர்கொண்டன. முதல் நாளில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் மறுநாள் பலி எண்ணிக்கை 1600-ஐ கடந்தது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் எதிரொலித்தது. தலைநகர் பாங்காக்கில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 17 பேர் மறுநாள் பிணமாக மீட்கப்பட்டனர். நேற்று பலி எண்ணிக்கை 18 ஆனது. மேலும் 33 பேர் காயமடைந்ததாகவும், 78 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியானது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆட்டம் கண்டதால் உச்சியில் இருந்த நீச்சல்குளம் உடைந்து தண்ணீர் அருவி போல கொட்டிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது. இந்தியாவிலும் மேற்குவங்காளம், மணிப்பூர், மேகாலயாவில் லேசான நிலநடுக்க அதிர்வுகளை உணர முடிந்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சியால் மக்கள் திண்டாடி வந்த நிலையில், நிலநடுக்கமும் அவர்களை உலுக்கியதால், உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை அறிவித்தன. இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீட்பு குழுவினரையும், நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்தது. இதற்கிடையே மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது.
அதே நேரத்தில் மீட்பு பணிகளும் முழுவீச்சில் நடந்து வந்தன. இந்த நிலையில் மூன்றாவது நாளாக நடந்த மீட்பு பணியில் நிலநடுக்கத்துக்கு பலியானாவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்து விட்டதாக அந்த நாட்டின் ராணுவ அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது. மேலும் 3 ஆயிரத்து 400 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும், இன்னும் 300 பேர் மாயமாகி இருப்பதாகவும் ராணுவ அரசின் செய்தி தொடர்பாளர் ஜாவ் மின் துன் கூறி இருந்தார்.
இதற்கிடையே மசூதியில் தொழுகை நடத்திய 700 முஸ்லிம்கள் நிலநடுக்கத்தில் இறந்ததாக தகவல் வெளியானது. முஸ்லிம்களுக்கு ரமலான் மாத வெள்ளிக்கிழமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நிலநடுக்கம் ஏற்பட்ட அன்றும், மண்டலே நகருக்கு அருகே ஒரு மசூதியில் சுமார் 700 பேர் கூடி தொழுகை நடத்திக் கொண்டு இருந்தனர். பூகம்பம் தாக்கியதில் மசூதி கட்டிடம் இடிந்து தொழுகையில் இருந்தவர்கள் மீது விழுந்து அமுக்கியது. அவர்கள் அனைவரும் பலியானது மீட்பு பணியின்போது தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த உயிரிழப்புகள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பலி எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு உள்ளதா என்பது பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த பூகம்பத்தில் மியான்மரில் 60 மசூதிகள் சேதம் அடைந்தன என்று ஒரு இணைய ஊடகம் தகவல் வெளியிட்டது. வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது.
இதேபோல மண்டலேவின் உ ஹ்லா தீன் மடாலயத்தில் 270 துறவிகள் மத தேர்வில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் தப்பிப் பிழைத்தனர். மற்றவர்கள் மாயமான நிலையில் 50 பேர் இறந்தது தெரியவந்தது. 150 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 2,719 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 4,500 பேர் காயமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.31 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.