'மின்மினி'-'போத்தீஸ்' இணைந்து நடத்திய சேலை தினப் போட்டி: பாரம்பரிய சேலையில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்

6 months ago 21

சென்னை,

உலக சேலை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக மின்மினி-போத்தீஸ் இணைந்து சேலை தினப் போட்டியை அறிவித்தது. அதன்படி, கல்லூரி மாணவிகளுக்கு இடையே நடனம், விவாதம், பாரம்பரிய சேலை அணிந்து வந்து அசத்துவது போன்ற பிரிவுகளில் போட்டியை பல்வேறு கட்டங்களாக நடத்தியது.

இதன் இறுதிப் போட்டிக்கான நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ், ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் இயக்குனர் என்.வெங்கடரமணன், டீன் எம்.எம்.ரம்யா, துணை டீன் ஆர்.சுரேக்ஹா, முதல்வர் பி.மஹாவீர், நடிகைகள் சுஜா வருணி, சனம் ஷெட்டி மற்றும் 'ஆர்.ஜெ' ஆனந்தி, 'டி.ஜெ.' தீபிகா, மின்மினி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு தலைமை அதிகாரி ஆர்.வெங்கட் சுந்தர்நாத், சுமையா நாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய சேலை அணிந்து வந்திருந்த மாணவிகள் 'வாக்கத்தான்'' சென்றனர். இறுதியில் 'டி.ஜெ.' மூலம் ஒலித்த இசையில் மாணவிகள் கலக்கல் நடனம் ஆடினார்கள். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்கும் நடனம், விவாதம், பாரம்பரிய சேலை அணிந்து வந்து அசத்துவது ஆகியவற்றுக்கான இறுதிப் போட்டிகள் தொடங்கின.

முதலில் நடனப்போட்டிகள் நடந்தது. கிட்டதட்ட 18 குழுக்களை சேர்ந்த மாணவிகள் நடனம் ஆடி அமர்க்களப்படுத்தினார்கள். சினிமா பாடல், கர்நாடக இசை ஆகியவற்றில் பட்டையை கிளப்பினார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் 3 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அந்த 3 நிமிடத்தை பார்வையாளர்கள் அனைவரையும் தங்கள் வசம் வைத்துக்கொள்ளும் வகையில் குத்தாட்டம் போட்டு பிரமிக்க வைத்தார்கள். இந்த போட்டிக்கான நடுவராக நடிகை சுஜா வருணி இருந்தார்.

அதன் பின்னர், "சேலை கட்டியதும், அழகாக தெரிவது எந்த தலைமுறை பெண்கள்?'' என்ற தலைப்பில் விவாதப் போட்டி நடந்தது. இதில் 2000-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களா? என்ற பிரிவில் 15 பேரும், 1980, 1990-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களா? என்ற பிரிவில் 15 பேரும் கலந்து கொண்டு தங்களுடைய வாதங்களை ஆணித்தரமாக முன்வைத்தனர். அவற்றில் பெரும்பாலானோர் கலகலப்பான கருத்துகளை முன்வைத்து அனைவரையும் பரவசப்படுத்தினார்கள். இந்த போட்டிக்கு நடுவராக 'ஆர்.ஜெ.' ஆனந்தி செயல்பட்டார்.

இதனையடுத்து கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய சேலை அணிந்து வந்து அசத்தும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மாணவிகள் பல்வேறு விதமான சேலைகளை அணிந்து வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். சேலை மட்டுமல்லாது அதற்கேற்றாற்போல், தங்களை அலங்கரித்தும் ஒய்யாரமாக மேடையில் நடந்து வந்தார்கள். இதற்கு நடுவராக சுமையாநாஸ் என்பவர் இருந்தார்.

இதனையடுத்து, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் குழு நடனப்போட்டியில் அண்ணா ஆதர்ஷ் கல்லூரி மாணவிகள் முதல் இடத்தையும், எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 2-ம் இடத்தையும், அண்ணா ஆதர்ஷ் கல்லூரி மாணவிகள் (மற்றொரு) 3-வது இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

விவாதப் போட்டியில் என்.மோனிஷா, சாய்உபாசனா, நித்யஜனனி ஆகிய மாணவிகள் முறையே 3 பரிசுகளையும், கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய சேலை அணிந்து வந்து அசத்திய போட்டியில் சைத்தனா கிருஷ்ணா, மிருதுபாஷினி, அதிதி ஜெயின் ஆகிய மாணவிகள் முறையே 3 பரிசுகளையும் பெற்றனர். இந்த 6 பேருக்கும் முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் மதிப்பிலான போத்தீஸ் நிறுவனத்தின் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன.

இதுதவிர, அட்டகாசமான போட்டோ, ரீல்ஸ்களை பதிவிடும் 'ஹேஷ்டேக்' போட்டியும் நடந்தது. அதில் வெற்றி பெற்ற அக்ஷயா, அதிதி ஜெயின், தாரணி பவித்ராவுக்கு அட்டகாசமான பரிசுகள் வழங்கப்பட்டன.

Read Entire Article