புதுடெல்லி: தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் கே.ஏ.பால் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தில், “தற்போது தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடத்த முடியும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் கூறியுள்ளார்.
அதேபோல சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 180 நாடுகள் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துகின்றன. தேர்தல் நேரத்தில் ரூ.9000 கோடியை இந்திய தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. அதேபோன்று வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த 18 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன” என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இதுபோன்ற மனுவை தாக்கல் செய்யும் எண்ணம் மனுதாரருக்கு எவ்வாறு வந்தது என்பது புரியவில்லை.
இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சந்திரபாபு நாயுடுவும், ஜெகன் மோகனும் தாங்கள் தேர்தலில் தோல்வி அடையும்போது மட்டுமே சந்தேகத்தை கிளப்புவார்கள். எனவே இந்த கோரிக்கையுடனான மனுவை ஏற்க முடியாது” எனக்கூறி தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post மின்னணு இயந்திரத்தில் முறைகேடு புகார்; மீண்டும் வாக்குச்சீட்டு முறை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.