
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இளங்காலப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ்குமார். இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு அகிலேஷ் (வயது3) என்ற மகனும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. சதீஷ்குமாரின் மனைவி ஐஸ்வர்யா, தாய் வீடான பெரும்பாலை அருகே எட்டிக்குழி கிராமத்தில் வசித்து வந்தார்.
அந்த பகுதியில் குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான மோட்டார் பழுதாகி நீண்ட நாட்களாக ஆகிறது. அந்த மோட்டார் சரி செய்வதற்காக கழட்டி சென்றுள்ளனர். ஆனால் அதற்கான மின்சார ஒயர்களை ஆங்காங்கே ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறியாத சிறுவர்கள், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சதீஷ்குமாரின் மகன் அகிலேஷ் கவனக்குறைவாக தொங்கி கொண்டிருந்த மின்ஒயரை தொட்டதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அகிலேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.