
நெல்லை,
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் சுப்பிரமணியபுரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் பிரதிபன். இவருக்கு மனைவி மற்றும் லிவிங்ஸ்டன் என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தான். நேற்று காலையில் குழந்தை லிவிங்ஸ்டன் அப்பகுதியில் உள்ள உறவினரின் வீட்டு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்குள்ள தண்ணீர் வாளியில் லிவிங்ஸ்டன் தலைகுப்புற விழுந்து தத்தளித்தான். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்தவாறு உடனே குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குழந்தை லிவிங்ஸ்டன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.