நாமக்கல் : மோகனூர் அருகே, மின்சாரம் தாக்கி குழந்தைகள் உள்பட 3 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ஆண்டாள்புரத்தில், கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்து இளஞ்சியம், அவரது பேரன் சுஜித், பேத்தி ஐவிழி ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். பின்னர், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாமக்கல் -திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி. ராஜேஷ்கண்ணன், ஏடிஎஸ்பி தனராசு மற்றும் போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 3 பேர் உயிரிழந்த இடத்தில் போடப்பட்ட கம்பி வேலியை அகற்றவேண்டும். கம்பிவேலி அமைத்த நிலத்தின் உரிமையாளர் மற்றும் மின்வாரிய ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதற்கு மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன், கம்பிவேலி அகற்றப்பட்டு உள்ளதாகவும், நில உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் என தெரிவித்தார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மறியல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மறியல் செய்தவர்களை காவல் துறை வாகனங்களில் ஏற்றத்தொடங்கினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டாபுரம் கிராமத்தில் 3 பேர் உயிரிழந்த விவசாய தோட்டத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில், நேற்று மாலை அகற்றப்பட்டது.
The post மின்சாரம் தாக்கி 3 பேர் பலி கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.