
சென்னை,
சமூக வலைத்தளத்தில் கடந்த சில தினங்களுக்குமுன்பு, வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோவில், கல்லூரி மாணவர்கள் சிலர் மின்சார ரெயிலின் மேற்கூரை மீது ஏறியும், பக்கவாட்டில் தொங்கியவாறும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்தது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலானது.
வீடியோ குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து, எப்போது நடந்தது? எந்த வழித்தடத்தில் நடந்தது? ரெயிலில் மேற்கூரையில் பயணம் செய்தது எந்த கல்லூரி மாணவர்கள்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை- சென்னை கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் மேற்கூரையில் ஏறி பயணம் செய்த வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் பதிவு செய்தது தெரிய வந்தது. மேலும், அந்த வீடியோவில் உள்ளவர்கள் தற்போது படிப்பை முடித்துவிட்டு வேலை பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து, எழும்பூர் ரெயில்வே போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, வீடியோவில் இருந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை இன்று (வெள்ளிக்கிழமை) ரெயில்வே போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளனர்.