மின்கட்டணம் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

3 hours ago 2

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

"தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கான மின் கட்டணத்தை வரும் ஜூலை மாதத்திலிருந்து உயர்த்தப்போவதாக தி ஹிந்து தமிழ்திசை நாளிதழில் இன்று வெளியாகியுள்ள செய்தி, சாமானிய மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது உண்மையான தகவலாக இருப்பின், திமுக அரசின் இந்த முடிவானது கடும் கண்டனத்திற்குரியது!

எதிர்க்கட்சியாக இருக்கையில் "தொட்டால் ஷாக்கடிக்கும் மின்கட்டணம் என பட்டி தொட்டியெல்லாம் பரப்புரை செய்த ஸ்டாலின், முதல்வராகப் பதவியேற்ற ஒரே மாதத்தில் மின் கட்டணமானது சராசரியாக 52% உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 2023, ஜூன் 2024 என இந்த இருண்ட திமுக ஆட்சியில் வருடாவருடம் உயர்த்தப்பட்டு வரும் மின்கட்டணத்தால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள். சிறு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது அரசுக்கு தெரியாதா?

செயல் திறன் அதிகரித்தல், பெரிய வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவைத் தொகை வசூலித்தல், மற்றும் கசிவு குறைப்பு ஆகியவற்றின் மூலம் TANGEDCO-வின் இழப்புகளைச் சரி செய்வதற்கு பதிலாக, திமுக அரசு மக்கள் தலையில் சுமையை தொடர்ந்து ஏற்றுவது நியாயமா? ஏற்கனவே திமுக-வின் திறனற்ற ஆட்சியில் படாத பாடு படும் தமிழக மக்கள் தொடர் விலையேற்றங்களாலும் வரி உயர்வினாலும் தங்கள் வாழ்வாதாரத்தையும் தொலைத்துவிட்டு வாழ வழி தெரியாமல் நிற்க வேண்டுமா? வாக்களித்த மக்களை வஞ்சிப்பதையே வாடிக்கையாக கொண்ட திமுக அரசு, தாம் என்ன செய்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறதா?

2021 தேர்தலின் போது, "மாதக் கணக்கெடுப்பு முறையை பின்பற்றி மக்களின் மின் கட்டண சுமையை குறைப்போம் மற்றும் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் போன்ற திமுக-வின் போலி வாக்குறுதிளை எல்லாம் காற்றில் பறக்க விட்டது மற்றும் தற்சார்பு மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் தனியாரை நம்பி தமிழகத்தைக் கடன் சுமையில் தத்தளிக்க விட்டது இவை தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனைகள்.

இப்படி மின்கட்டண உயர்வு ஒரு புறம் மக்களை வாட்டி வதைக்கிறது என்றால், ஆவின் பால் விலை, சொத்து வரி (25%, 150% உயர்வு!), சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், கட்டிட அனுமதிக்கான கட்டணம், தொழில்முறை வரி என திமுக ஆட்சியில் அதிகரிக்கும் மற்ற விலைவாசிகளும் வரி உயர்வும் மக்களை விழி பிதுங்க வைக்கிறது.

வேடிக்கையான உண்மை என்னவென்றால், இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டு, டாஸ்மாக் கொழுத்தது மட்டுமல்லாமல், அதில் ஆட்சியாளர்களும் கொழுத்தார்கள் என இப்பொழுது எழுந்திருக்கும் ரூ. 1000-கோடி டாஸ்மாக் மோசடி செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஆகவே, மறுபடியும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் அது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கும் என்பதை உணர்ந்து, அப்படிப்பட்ட முடிவை உடனடியாக திமுக அரசு கைவிட வேண்டும். மீறி, விலையேற்றமானது அமலுக்கு வந்தால், மிகப்பெரிய போராட்டங்களை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரித்து கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read Entire Article