மிகக் கனமழை பெய்யுமாம்… டூவீலர், காரில் பயணிப்பவர்களே உஷாருங்க… வாகனங்கள் வழுக்கிட்டா ஆயிடும் பேஜாருங்க…

1 month ago 8

*தண்ணீர் தேக்கத்தில் மெதுவாக செல்லுங்க

*இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்க

திண்டுக்கல் : மழைக்காலத்தில் உங்கள் வாகனங்களை மிகச் சிறந்த கவனிப்புடன் வைத்திருக்க சில கார் பராமரிப்பு குறிப்புகள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாக உள்ளது. அந்த வகையில் மழைக்காலத்தில் வாகனங்களை பராமரிப்பது குறித்து சில டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.கடுமையான வெயிலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பருவ நெருங்கி வருகிறது.

மழை காலம் என்பதால், உங்கள் கார் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் அதன் உலோகம் மற்றும் இதர பாகங்களில் தண்ணீரின் தாக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மழையில் ஒரு குடையுடன் நாம் எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்கிறோமோ, அதைப் போலவே, மழைக்காலத்தில் உங்கள் வாகனத்தை மிகச் சிறந்த கவனிப்புடன் வைத்திருக்க சில கார் பராமரிப்பு குறிப்புகள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

மெழுகு பாலிஷ் செய்வதன் அவசியம்

சாலைகளில் உள்ள அழுக்குகளும், சேறுகளும் சேர்ந்து கொண்டு நம் காரை அசுத்தமாக்குகின்றன. நம் காரை எப்போதும் சுத்தம் செய்தாலும், அதனை மெதுவாக செய்ய வேண்டும். இதுக்காக மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த துணியைக் கொண்டு காரை நன்றாகத் தொடைக்க வேண்டும். பின்னர், கடைகளில் கிடைக்கும் கார் வேக்ஸைப் பயன்படுத்தி, நன்றாக காரின் உடல் முழுவதும் தேய்த்து விட வேண்டும். இதனால் நம் கார் சிறிய ஸ்கிராட்சுகளில் இருந்து தப்பிக்கும். அதுமட்டுமில்லாமல், பளபளவென ஜொலிக்கும்.

கிழிந்த வைப்பர் பிளேடுகளை சரி பார்த்து மாற்றுங்கள்

மழையில் வாகனம் ஓட்டும்போது, முன்செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரிவது அவசியம். இதற்கு உதவியாக இருப்பது வைப்பர். இதில் வரும் பிளேடுகள் தான் முன்னிருக்கும் கண்ணாடியை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இதனை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது நல்லது. சீரான பிளேடு இருந்தால் மட்டுமே மழை காலங்களில் உங்களால் வாகனத்தை சரியாக ஓட்ட முடியும். பிளேடை சரிபார்த்து அதில் பழுது இருந்தால் உடனடியாக மாற்றுவது நல்லது. இதை மாற்றுவதால் முன் இருக்கும் முகப்பு கண்ணாடியில் ஸ்கிராட்சுகளை தவிர்க்கலாம் என்பது கூடுதல் நன்மை.

முகப்பு விளக்குகளை சுத்தம் செய்தல்

மழை காலங்களில் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுவது அவசியம். ஹெட்லைட்டுகள், டெயில்லைட்ஸ், இன்டிகேட்டர்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை பயணம் தொடங்கும் முன் உறுதி செய்துகொள்ள வேண்டும். இரவில் நெடுந்தூரம் பயணிக்கும் போது, அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். எந்த விளக்குகளும் சரியாக இயங்கவில்லை என்றால், அவற்றை ஒரு மெக்கானிக் இடம் கொடுத்து சரிபார்க்க வேண்டும். எப்போது நல்ல தரத்திலான விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ப்ரேக்கிங் சிஸ்டத்தை பராமரிக்கவும்

நம் காரில் இருக்கும் பிரேக்குகள், நம் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம். நமது காரை வெளியே எடுப்பதற்கு முன், குறிப்பாக ஈரமான மேற்பரப்புகளில் அவற்றின் செயல்பாட்டை சரிபார்க்கவும். மேலும், பிரேக் ஃப்ளூயிட் (fluid) அளவு சரியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும். தேவைப்பட்டால் அதனை சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். முறையான பராமரிப்பு, அதிகபட்ச பிரேக் செயல்பாட்டை உறுதி செய்கிறது.

டயர் கிரிப் செக் செய்யவும்

உங்கள் காரின் செயல்திறனில் டயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக மழை நீர் வடிகின்ற சாலைகளில் போதுமான பிடிப்பை உறுதிப்படுத்த டயர் உதவிகரமாக இருக்கிறது. எனவே டயரில் கிரிப் சரியாக இருக்கிறதா என்பதை அடிக்கடி சோதித்துப் பாருங்கள். நல்ல செயல்திறனுக்கு ஏற்ற வகையில் சரியாக டயர்கள் பயன்படுத்துவது அவசியம். விலை குறைந்த டயர்களை வாங்கும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வாகனத்தின் வேகத்தில் கவனம்

நான்கு சக்கர வாகனத்தை தண்ணீருக்குள் ஓட்டிச் செல்வதாக இருந்தால், எவ்வளவு ஆழமுள்ள தண்ணீருக்குள் ஓட்டுகிறோம் என்பதில் கவனம் வேண்டும். வாகனத்தின் சக்கரம் பாதி மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் செல்லலாம்.குறிப்பிட்ட வாகனங்களில் அரை அடி முதல் முக்கால் அடி ஆழம் வரை தண்ணீரில் செல்லலாம். அதுவே, எஸ்யூவி பெரிய வாகனம் என்றால் அதிகபட்சம் ஒரு அடி ஆழம் வரை செல்லலாம். அதிக மழை பெய்துள்ளது, ஆனால் வேறு வழியில்லை தண்ணீரில் ஓட்டியாக வேண்டும் என்னும்போது தற்காப்பு ஓட்டுதலைத்தான் மேற்கொள்ள வேண்டும். தண்ணீருக்குள் போகும்போது வேகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வேகம் கூட்டினால் சிக்குவது நிச்சயம்

மணிக்கு 10-20 கி.மீட்டருக்கு மிகாமல் செல்ல வேண்டும். தண்ணீரை குடைந்து கொண்டு வேகமாக செல்லக் கூடாது. அப்படி சென்றால், ‘ஏர் ஃபில்டர்’ வழியாக தண்ணீர் வாகன இஞ்சினுக்குள்ளே இழுத்துக் கொள்ளப்படும். ஆகவே வேகத்தை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். தற்காப்பு ஓட்டுதலில் மற்றுமொரு அம்சமும் உண்டு. தண்ணீருக்குள் ஓட்டிச் செல்லும்போது, முன்னால் நடந்து செல்பவர்களையோ அல்லது வாகனங்களையோ கவனித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

அதன் மூலம் ஒருவேளை அவர்கள் ஏதேனும் ஓரிடத்தில் பள்ளத்தில் இறங்கி ஏறினால், அந்த ஆழத்திற்கு நம் வாகனம் செல்லுமா செல்லாதா என்பதைக் கணித்து ஓட்டிச் செல்ல முடியும். சக்கர உயரத்தில் பாதியளவு வரை மூழ்கி விடும் அளவுக்கான தண்ணீரில் சென்று வந்த பிறகு, பிரேக்குகளில் சேறு சகதிகள் சேர்ந்துவிடக்கூடும் என்பதால் முன், பின் என இரண்டு பக்கமும் பிரேக் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

சைலென்சர் ரொம்ப முக்கியம்

மழை நேரங்களில் ஸ்கூட்டர் வகை வாகனங்களை எடுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். வீட்டிற்கு அருகில், மிகச் சொற்ப தூரத்திற்குள் நீர் தேங்காமல் இருக்கும்போது ஓட்டிக் கொள்ளலாம். ஆனால், பள்ளங்கள், மேடுகளில் அதை ஓட்டுவது நல்லதல்ல. மேடுகளில் ஏற சிரமப்படும், சிறிய சக்கரத்தைக் கொண்டது என்பதால் சறுக்கிவிடக்கூடும். டூவீலரிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் சைலென்சர் நனையாத வகையில் செல்லும்போது வாகனத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது மூழ்கிவிட்டால், வண்டி எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறதோ அதே நிலையில் ஆக்சிலேட்டரை சீராக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால், சைலென்சர் வழியாக தண்ணீர் புகுந்து இன்ஜினுக்குள் சென்றுவிடும். இஞ்சினுக்குள் சென்றுவிட்டால், வாகனம் மொத்தமாக நின்றுவிடும். சராசரியாக ஒரு அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலே சைலென்சருக்குள் போய்விடும்.

ஆகவே ஓட்டும்போதும் நிறுத்தி வைக்கும்போதும் தண்ணீரின் அளவு சைலென்சரை எட்டுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஒருவேளை தண்ணீர் உள்ளே புகுந்து வாகனம் நின்றுவிட்டால், உடனே அதை ஸ்டார்ட் செய்யக் கூடாது. மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்று, சைலென்சர் போன்ற பாகங்களை கழட்டி காய வைக்க வேண்டும்.சைலன்சருக்குள் தண்ணீர் உள்ளே சென்று வண்டி நின்றுவிட்டால், இயன்றவரை அதை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பதே நல்லது.

மழை நேரத்தில் வாகனத்தை உயரமான இடத்தில் நிறுத்துவது நல்லது. வாகனம் ஒருவாரத்திற்கு மழைநீரில் நின்றுவிட்டது என்றால், சக்கரங்களைக் கழட்டி சுத்தம் செய்ய வேண்டும். பிரேக் ஷூ தண்ணீரில் ஊறிவிடுவதால், சறுக்கிவிட வாய்ப்புள்ளது. அதைக் கவனிக்க வேண்டும். தண்ணீரில் நீண்ட நாட்கள் நின்றாலும் இதைச் செய்தால் போதும்.

அதோடு, தண்ணீர் வடிந்த பிறகு சைலென்சர், ஏர் ஃபில்டருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி போயிருந்தால், அதைக் கழட்டி சுத்தம் செய்து பொருத்த வேண்டும். மற்றபடி எந்தப் பிரச்னையும் வராது.வாகனம் மழையிலேயே நீண்ட நாள் நின்றாலும், தினமும் 30 நிமிடமாவது ஸ்டார்ட் செய்து நின்ற இடத்திலேயே ஓடவிடுவது நல்லது. அப்படிச் செய்தால், வண்டி பாகங்கள் சூடாகிக் கொள்ளும், பெரிய பிரச்னைகள் எதுவும் இருக்காது.

இருப்பினும், தண்ணீர் வடிந்து வண்டியை எடுக்கும்போது ஒரு மெக்கானிக்கிடம் வண்டியை விட்டு ஒரு பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. வாகன பேட்டரியை பொறுத்தவரை, இப்போதுள்ள வாகனங்களில் வண்டியை ஸ்டார்ட் செய்து ஓடவிட்டாலே தானாக சார்ஜ் ஆகிக் கொள்ளும் வகையில் தான் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, குளிர்ச்சி காரணமாக எந்த பாதிப்பும் பேட்டரிக்கு வராது.

The post மிகக் கனமழை பெய்யுமாம்… டூவீலர், காரில் பயணிப்பவர்களே உஷாருங்க… வாகனங்கள் வழுக்கிட்டா ஆயிடும் பேஜாருங்க… appeared first on Dinakaran.

Read Entire Article