![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39018922-miruna.webp)
சென்னை,
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத்தின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில், எமர்ஜென்சியை 'மாஸ்டர் பீஸ்' என நடிகை மிருணாள் தாகூர் வர்ணித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'நான் இப்போதுதான் என் தந்தையுடன் தியேட்டரில் எமர்ஜென்சியைப் பார்த்தேன். அது ஒரு மாஸ்டர்பீஸ். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். திரைக்கதை, வசனம், இசை, எடிட்டிங் என அனைத்துமே சிறப்பாக இருந்தது. கங்கனா, நீங்கள் ஒரு நடிகை மட்டுமல்ல, ஒரு உண்மையான கலைஞர். இந்த மிகச்சிறந்த படைப்பை உருவாக்கிய கங்கனா மற்றும் எமர்ஜென்சியின் ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.