மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்

4 months ago 8

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் 2025 ஜனவரி 1ம்தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது. இவ்வாறு, திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை, மாவட்ட கலெக்டரிடமிருந்து மாவட்ட திமுக பெற்று, சட்டமன்ற தொகுதி வாரியாக, அந்தந்த ஒன்றிய, நகர், பகுதி, பேரூர் செயலாளர்களிடம் உடனே பிரித்து வழங்கப்பட உள்ளது.வாக்காளர் பட்டியலை பெற்ற பின்பு, அந்தந்த ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், அந்தந்த பாகத்திற்குரிய வார்டு, கிளை செயலாளர்கள் மூலம் வழங்கி, அந்தந்த வாக்குச்சவாடி நிலை முகவர்கள் வசம், கிளை செயலாளர்கள் ஒப்படைத்திட வேண்டும்.

வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலை பிரித்து, அந்த பாகத்தில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அந்தந்த வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களிடம் பிரித்து தர வேண்டும். மேலும், வாக்குச்சாவடி தேர்தல்பணிக்குழு உறுப்பினர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து அந்த வாக்காளர்களின் குடும்பத்தினரிடம் உரையாட வேண்டும். வருகிற 2026-சட்டமன்ற தேர்தலுக்காக இப்போதிலிருந்தே வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களின் தேவைகளை உடனுக்குடன் கண்டறிந்து, அதை உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று இப்பணியை முனைப்புடன் செய்திட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

The post மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article