சிவகங்கை, ஜன.12: சிவகங்கை மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த திமுக ஆட்சியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கட்டாயம் கொண்டாட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பொங்கல் விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாணவ,மாணவிகள் வீடுகளில் இருந்து அரிசி மற்றும் பொங்கலுக்கான பொருட்கள் எடுத்துச்சென்று மிகப்பெரிய பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதுபோல் அனைத்து கல்லூரிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் தமிழர் பாரம்பரிய வேட்டி, சேலை, தாவணி உடையணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புறப்பாடல், கும்மிப்பாடலுடன் மாணவ,மாணவிகள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சி நடந்தது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பு குறித்து மாணவ,மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கலெக்டர் ஆஷாஅஜித், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி மற்றும் அலுவலர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
சிவகங்கை எஸ்பி அலுவலகம், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
The post மாவட்டம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம் appeared first on Dinakaran.