மதுரை: திருப்பரங்குன்றத்தில் பிப். 4-ல் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணியும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் வந்தார். அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இவற்றால் திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினை சர்ச்சையானது.