மும்பை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடியாக தொடங்கி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை அலறவிட்டார்.
இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார். அவர் 17 பந்துகளில் அரைசதம் விளாசி அமர்களப்படுத்தினார். கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே, இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் ஆகும்.
தொடர்ந்து அதிரடி காட்டி வந்த அபிஷேக் சர்மா வெறும் 37 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது 2வது சதமாகும். மறுமுனையில் இந்திய வீரர்கள் வந்ததும், போனதுமாக இருக்க நிலைத்து நின்று அதிரடி காட்டி வந்த அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்திருந்தபோது 17.6வது ஓவரில் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
The post டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்த அபிஷேக் சர்மா! appeared first on Dinakaran.