மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க 2 ஆண்டுகளில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடவு

15 hours ago 2

*கலெக்டர் பெருமிதம்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கலெக்டர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: ஏழை மக்களுக்கு அனைத்து சட்ட உதவிகளும் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும், சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகப்படுத்தவும், பசுமை போர்வையை விரிவுபடுத்தும் வகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வனம் மற்றும் பசுமைப் பரப்பினை 33 சதவீதமாக உயர்த்துவதுதான் இதன் முக்கிய நோக்கமாகும். நாமக்கல் மாவட்டத்தில் வனம் மற்றும் பசுமை பரப்பானது 14 சதவீதமாக உள்ளது.

இதனை 33 சதவீதமாக உயர்த்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு 10.21 லட்சம் மரக்கன்றுகளும், 2024ம் ஆண்டு 9.75 லட்சம் மரக்கன்றுகளும் என கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் நடப்பட்டுள்ளன.

மரங்களை நடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்களும், இந்த முன்னெடுப்பில் பங்கெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒன்று அல்லது 2 மரக்கன்றுகளை நட்டு தொடர்ந்து முறையாக பராமரிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் உமா கூறினார்.நிகழ்ச்சியில், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், ஏடிஎஸ்பி விஜயராகவன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகுணா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் நீதிபதி வேலுமயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீர்மருது, வேம்பு, செண்பகம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகளிர் சுய உதவி குழுவினர், அரசு துறை அலுவலர்கள், பொதுமக்களுக்கு மஞ்சள் கடம்பு, நீர் மருது, வேம்பு, மகாகனி, செண்பகம், தேக்கு, அசோகா, புளி, பொன்மருது, இலுப்பை, வில்வம், கயா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட நீதிபதி வேண்டுகோள்

நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குருமூர்த்தி பேசுகையில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கம் காரணமாக எடுக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக, அதிகளவில் மரக்கன்றுகள் நட வேண்டும். இதனால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு மக்களுக்கு சுகாதாரமான காற்று கிடைக்கும். சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளியை குறைக்க, இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

வசதி படைத்தவர்கள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு செல்ல முடியும் என்ற நிலையை மாற்றி, பொருளாதார ஏற்றத்தாழ்வு நீதியை பெறுவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில்தான் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட உதவிகள் மற்றும் சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கு வராமலேயே பொதுமக்களுக்கு உள்ள சட்ட பிரச்னைகளை தீர்ப்பதுதான் இந்த ஆணைக்குழுவின் முக்கிய நோக்கமாகும். உடல்நிலை சரியில்லை என்றால், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறோம். அதுபோல சட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாண, சட்ட மருத்துவமனை என சொல்லும் அளவிற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது என்றார்.

The post மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க 2 ஆண்டுகளில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Read Entire Article