மாவட்டத்தில் நடப்பாண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ₹1,200கோடி வங்கிக்கடன் வழங்கல்: மேலும் ₹402 கோடி வழங்க ஏற்பாடு

2 weeks ago 2

சேலம், ஜன.26: சேலம் மாவட்டத்தில், நடப்பாண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ₹1,200 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ₹402 கோடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை, பஸ்களில் இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் என பெண்களுக்கான பல்ேவறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ேமலும், மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு விதமான மானியங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், பெரும்பாலான நடவடிக்கைகளை வங்கிகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களும் வங்கிகள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் இதனை சிறப்பாக தொடரும் வகையிலும், வங்கிகள் மூலமான திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்று சேர்வதை உறுதிசெய்யும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள வங்கி அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 229 பொதுத்துறை வங்கிக்கிளைகள், 189 தனியார் வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 117 அரசு சார்ந்த வங்கிகள் என மொத்தம் 535 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் பிரநிதிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம், பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், நடப்பு 2024-2025 நிதியாண்டில் வேளாண்மை, கல்விக்கடன், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் நடப்பு 2024-2025ம் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ₹1,602 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தற்பொழுது வரை ₹1,200 கோடி வழங்கப்பட்டு, மீதமுள்ள ₹402 கோடி கடனை விரைந்து வழங்க, வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் ஆர்வமுடன் தொழில் தொடங்க வரும் தொழில்முனைவோர்கள் மற்றும் கல்விக் கடன் கேட்டு வரும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர்களுக்கு வங்கிக் கடனுதவிகளை விரைந்து வழங்க தேவையான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் வேளாண் கடன், கல்விக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கடன் உள்ளிட்ட வங்கிகளின் பல்வேறு திட்ட செயல்பாடுகளை பொதுமக்கள் அதிகளவில் அறிந்து பயன்பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார். கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வாணி ஈஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் நடப்பாண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ₹1,200கோடி வங்கிக்கடன் வழங்கல்: மேலும் ₹402 கோடி வழங்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article