மாற்றுப்பயிராக மாஸ் காட்டும் டிராகன்!

2 weeks ago 6

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நெல் சாகுபடியில் மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருக்கிறது. சமீப காலமாக இம்மாவட்டத்தில் நெல் விளைச்சல் வழக்கத்தைவிட அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருள் செலவு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணிகளால் சில விவசாயிகள் மாற்றுப் பயிர்களை நாடி வருகிறார்கள். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா இளையாங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான டோமினிக் சேவியர், தனது நிலத்தில் டிராகன் பழ சாகுபடியில் இறங்கி நல்ல விளைச்சல் எடுத்து வருகிறார். இதுகுறித்து அறிந்து டோமினிக் சேவியரைச் சந்தித்தோம்.

“எங்களுக்கு சொந்தமாக 8 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. பிளஸ் 2 வரை படித்த எனக்கு விவசாயத்தின் மீதுதான் அதிக நாட்டம். நெல், கரும்பு, மலர் வகைகள் என பல பயிர்களை சாகுபடி செய்வேன். ஆனால் அந்தப் பயிர்களில் போதுமான லாபம் கிடைக்கவில்லை. அதோடு பராமரிப்புக்கு ஆட்கள் பற்றாக்குறை பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கு மாற்றாக என்ன செய்யலாம்? என யோசித்தபோது டிராகன் பழம் குறித்து கேள்விப்பட்டேன். இதை செய்து பார்க்கலாமே என தோன்றியதால் டிராகன் பயிரிடப்பட்டிருந்த பல இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தேன். அப்போது டிராகன் சாகுபடி மிக எளிமையாக இருந்ததை அறிந்தேன். பராமரிப்பு செலவும், தண்ணீர் செலவும் குறைவு என்பதை கண்கூடாக பார்த்து உணர்ந்தேன். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிராகன் பழத்தை சாகுபடி செய்யத் தொடங்கினேன். முதல் முயற்சியாக ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் டிராகன் பழத்தைப் பயிரிட்டேன். நல்ல விளைச்சல் கிடைத்தது. இப்போது சாகுபடி பரப்பை அதிகப்படுத்தி இருக்கிறேன்’’ எனக் கூறிய டோமினிக் சேவியர், டிராகன் சாகுபடி முறை குறித்தும் விளக்கினார்.

“டிராகன் பழத்தைப் பயிர் செய்ய ஏக்கருக்கு அதிகபட்சம் ₹7.50 லட்சம் வரை செலவாகும். சிறு விவசாயிகளுக்கு இது கஷ்டம்தான். ஆனால் ஒருமுறை இந்தத் தொகையை முதலீடு செய்துவிட்டால், தொடர்ந்து 20 முதல் 25 ஆண்டுகள் வரை மகசூல் பெற்று பலன் அடையலாம். வேறு எந்தப் பயிரிலும் இப்படியொரு அம்சம் இல்லை. ஒரு ஏக்கருக்கு 2000 பழக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். நான் ஏக்கருக்கு 500 கல் தூண்கள் அமைத்து, ஒரு தூணுக்கு 4 செடிகள் வீதம் நட்டிருக்கிறேன். செடி மற்றும் பழத்தின் பாரத்தை தாங்க வேண்டும் என்பதால் உறுதியான கல்தூண்களை குடை வடிவில் அமைத்திருக்கிறேன். சில இடங்களில் மூங்கில் தூண்களை அமைக்கிறார்கள். அவை அடிக்கடி சரிந்துவிடும். இதனால் செடிகளும் சேதமாகிவிடும்.

டிராகன் பழத்தை சாகுபடி செய்துள்ள நிலத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது. இதற்கு சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். அதோடு மேடான பாத்திகட்டி செடிகளை நட வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தாது.நான் இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் செலவு குறைவாகவே ஆகிறது. பழமும் சுவையாக இருக்கிறது. மாட்டு எரு, ஆட்டு எரு மற்றும் தொழுவுரத்தை மட்டுமே செடிகளுக்கு இடுகிறேன். நான் சாகுபடி செய்திருப்பது தைவான் கிங்ரைட் ரகம். இது அதிக மகசூல் தரும் தன்மை கொண்டது. என்னுடைய குடும்பத்தினர் மட்டுமே இந்தத் தோட்டத்தைப் பராமரிப்பதால் ஆட்களுக்கான கூலியும் மிச்சமாகிறது. நடவு செய்த முதல் ஆண்டிலேயே ஒன்றரை டன் பழம் மகசூல் கிடைத்தது. ஆரம்பத்தில் ஒரு பழம் 200 கிராம் முதல் கால் கிலோ வரை இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகபட்சம் 500 கிராம் முதல் 900 கிராம் வரையிலும் பழத்தின் எடை அதிகரிக்கும். இதனால் லாபமும் அதிகரிக்கும். ஒரு செடிக்கு அதிகபட்சம் 10 முதல் 15 பழங்கள் வரை கிடைக்கிறது.

ஒரு கிலோ பழத்தை அதிகபட்சம் ₹150 முதல் ₹200 வரை விலை வைத்து வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். தரமான பழமாக இருந்தால் இன்னும் கூடுதல் விலை கிடைக்கிறது. இதன் மூலம் ஏக்கருக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. முதல் இரண்டு ஆண்டுகளில் நாம் செலவு செய்த தொகையை எடுத்துவிடலாம். அதன்பிறகு நமக்கு தொடர்ந்து லாபம்தான். இப்போதெல்லாம் உள்ளூரிலேயே டிராகன் பழங்கள் விற்பனையாகிவிடுகின்றன. வெயில் காலத்தில் செடி மஞ்சள் நிறமாகிவிட வாய்ப்பு அதிகம். அவ்வாறு ஆகாமல் ஈரத்தன்மையுடன் செடிகளை வைத்திருக்க சுண்ணாம்பு வகையான கிளே பவுடரை தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். அதிகமாக மழை பெய்யும் சமயத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி, செடிகள் அழுகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேறு எதுவும் பெரிய அளவிலான பராமரிப்பு எதுவும் இருக்காது. டிராகன் பழச் சாகுபடி விவசாயிகளுக்கு, வேளாண் துறை மூலமும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதனால் நம்பிக்கையுடன் டிராகனைப் பயிரிடலாம்’’ என அடித்துக் கூறுகிறார்.
தொடர்புக்கு:
டோமினிக் சேவியர்: 91599 11233.

பல்வேறு மருத்துவக் குணங்களோடு அபாரமான சுவையும் கொண்டிருப்பதால் டிராகன் பழத்திற்கு சந்தையில் நல்ல டிமாண்ட். இதனால் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் மக்கள் டிராகனை விரும்பி வாங்குகிறார்கள்.

பெரு நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்கள், கிராமங்கள் என பட்டி தொட்டியெங்கும் இப்போது டிராகனுக்கு மவுசு உருவாகி இருக்கிறது. இதனால் இதை சந்தைப்படுத்துவது எளிதாகி இருக்கிறது.

The post மாற்றுப்பயிராக மாஸ் காட்டும் டிராகன்! appeared first on Dinakaran.

Read Entire Article