மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் :ஒன்றிய அமைச்சருக்கு, எம்.பி. ரவிக்குமார் கடிதம்

3 weeks ago 4

சென்னை : ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவது போல பகுதியளவு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 6,000 ஆகவும், முழு அளவு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.15,000 ஆகவும் உதவித்தொகை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமாருக்கு, விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்

ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு வீரேந்திர குமார் அவர்களுக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.

இன்று நான் எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன்:

“ 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகையான 121 கோடியில், 2.68 கோடி பேர் ‘ மாற்றுத் திறனாளிகள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர், இது மொத்த மக்கள் தொகையில் 2.21% ஆகும். அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

1. ஆந்திரப் பிரதேச அரசால் வழங்கப்படுவதுபோல் இந்தியா முழுதுமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை பகுதியளவு மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.6,000 ஆகவும், முழு அளவு மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.15,000 ஆகவும் உயர்த்த வேண்டும்.

2. உதவித்தொகைக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

3. வயது வித்தியாசமின்றி, தகுதியுள்ள அனைத்து நபர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை வழங்க வேண்டும்.

4. நூறு நாள் வேலைத் திட்டத்தின் ( MGNREGA) கீழ் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும்.

5. டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அந்த்யோதயா அன்ன யோஜ்னா (A.A.Y.) குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் :ஒன்றிய அமைச்சருக்கு, எம்.பி. ரவிக்குமார் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article