‘‘நடிகர் கட்சியில் பிட்காயின் மோசடி நடப்பதாக சொல்லி கொந்தளிப்பில் இருக்கிறாங்களாமே மாநாடு மாவட்ட இளசுகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுசா கட்சி தொடங்கிய நடிகர் மாநாடு போட்ட மாவட்டத்தில் ஒன்றிய, நகர பொறுப்புகளுக்கு நியமனத்தில் மாவட்ட, மாநில பொறுப்பில் இருப்பவர்கள் லகரக் கணக்கில் வசூலித்து வருகிறார்களாம்.. குறிப்பா மாவட்ட பொறுப்பில் உள்ளவரின் பிறந்த நாளுக்கு இளசுகளிடம் ஆயிரம் முதல் ஐந்தாயிரம், பத்தாயிரம் வரை வசூலித்து பிறந்தநாள் விழாவை தடபுடலாக கொண்டாடி இருக்கிறாராம்.. தலைவர், என்னைக் கேட்டுதான் எல்லா பொறுப்புகளுக்கும் ஆட்களைப் போடுவார் என்று கூறி இளைஞர்களிடம் ஆசைவார்த்தைகள் மூலம் ஆயிரக்கணக்கில் கல்லா கட்டி வருவதால் மாநாடு போட்ட மாவட்டத்தில் நடிகர் மீது இளைஞர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்களாம்..
அது மட்டுமா பிட்காயின் முதலீடு என்றும் இளைஞர்களிடம் ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் முதலீடு செய்வதாகவும், கல்லாக்கட்டும் கும்பல் நடிகர் கட்சியில் வலம் வந்து கொண்டிருக்கிறதாம்.. கட்சி கட்டமைப்பு ஏற்படுவதற்குள்ளே லட்சக்கணக்கில் இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபடும் நிர்வாகிகள் மீது அதிருப்தி எழுந்திருக்கிறதாம்.. விரைவில் இது காவல் நிலையம் வரை பஞ்சாயத்திற்கு செல்ல இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுவதுதான் இப்போதைய ஹைலைட்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலராத கட்சியில் மாற்றப்பட்ட மாவட்ட தலைவரும், ஆதரவாளர்களும் சுருட்டியது வரை போதும் என சைலண்ட் மோடுக்கு போயிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்ட மலராத கட்சியின் மாவட்ட தலைவருக்கு கல்தா கொடுக்கப்பட்டு, புதிய மாவட்ட தலைவர் நியமிக்கப்பட்டு இருக்கிறாரு.. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தொகுதிக்கு தொடர்பே இல்லாதவரை தென் மாவட்ட தொகுதிகளுக்கும் செலவு செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு பல கோடி பட்ஜெட்டில் களமிறக்கினாங்க..
பேசியபடியே அந்த வேட்பாளரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை வாரி இறைத்தார். உள்ளூர் மற்றும் மாவட்ட மலராத கட்சியினரும் கணிசமான தொகையை அவரிடம் இருந்து கறந்து விட்டனராம்.. அதில் என்ன சுவாரஸ்யம் என்றால் மாவட்ட தலைவராக இருந்தவரும், அவரது அடிபொடிகளும் சேர்ந்து 50 சி வரை சுருட்டியுள்ளதாக பரபரப்பாக பேசப்படுது.. ஆனால், அதற்குரிய அளவுக்கு வேலை பார்க்காமல் ஒதுங்கிக் கொண்டனராம்.. தேர்தலில் பலத்த அடி வாங்கிய அந்த வேட்பாளர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அகில இந்திய தலைமையின் கவனத்திற்கு பஞ்சாயத்தை கொண்டு சென்றிருக்கிறாராம்.. தேர்தல் முடிந்ததும் மாவட்ட தலைவர் மாற்றப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது கட்சி தலைமையும் மாவட்ட தலைவரை மாற்றியுள்ளது.. சுருட்டிய வரை போதும். அந்த பணத்தை பாதுகாத்தால் போதுமென நீக்கப்பட்ட தலைவரும், அவரது ஆதரவாளர்களும் சைலண்ட் மோடுக்கு சென்று விட்டனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போட்டிப்போட்டு பணம் கறக்கும் இன்ஸ், எஸ்ஐ மீது தொடர் புகாரால் ரகசிய விசாரணை நடந்துகிட்டு இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை புறநகர் பகுதியில் பணியாற்றும் இன்ஸ் பணம் கறப்பதில் கறாராக இருக்கிறாராம்.. 6 மாசத்துக்கு முன்னாடிதான் இங்க போஸ்டிங் வாங்கிட்டு வந்திருக்கிறார். குறுகிய காலத்துலேயே அபார வளர்ச்சியாம்.. சிவில் பிரச்னை, மணல் கடத்தல், லாட்டரி, குட்கா விற்பனைன்னு இன்ஸ் கால் வைக்காத இடமே இல்லையாம்.. சமீபத்துல விவசாயி ஒருவர் தன்னுடைய பெயர்ல இருக்கிற துப்பாக்கி லைசென்சை தன்னோட மகன் பெயருக்கு மாத்துவதற்காக இன்ஸ் கிட்ட போயிருக்கறாரு.. அதுக்கு 25 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். 2 ஆயிரம் வேணும்னா தருகிறேன்னு விவசாயி சொல்லி இருக்கிறாரு.. நீ என்ன எனக்கு பிச்சை போடறயா? பணம் கொடுக்க முடியாத உனக்கு எல்லாம் துப்பாக்கி ஒரு கேடான்னு ஏக வசனத்துல ஒருமையில திட்டி இருக்கிறாரு.. இதனால நொந்து போன விவசாயி சத்தமே இல்லாம வீட்டிற்கு திரும்பிட்டாராம்..
இதேபோல பொங்கல் நாளில் துறையான போலீஸ் ஸ்டேசன் லிமிட்டில் மெகா சேவல் சூதாட்டம் நடந்திருக்கு.. தகவல் தெரிஞ்சு சம்பவ இடத்திற்கு போன இன்ஸ் அங்கு சூதாட்டத்துல ஈடுபட்டவங்கிட்ட இருந்து லகரங்களை கறந்துகிட்டராம்.. அதோடு 4 பைக்குகளையும் பறிமுதல் செய்து அதுக்கு தனியாக ஒரு தொகை வேணும்னு அடம் பிடிச்சிருக்கிறார். லகரங்களையும் கறந்துட்டு பைக்குகளுக்கு தனியாக பணம் கேட்டதால டென்சன் ஆன சேவல் சூதாட்டக்காரங்க இதை பத்தி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி கவனத்திற்கு கொண்டு போயிருக்காங்க.. அதுக்கு பின்ன 1 பைக்கை மட்டும் விடுவித்துவிட்டு 3 பைக்குகளை வழக்கில் கொண்டு வந்து இன்ஸ் கணக்கு காட்டினாராம்.. இன்ஸ் கணக்கு இப்படி போயிட்டு இருக்கிற நிலையில அதே ஸ்டேசன் எஸ்ஐ ஒருத்தரும் இன்ஸ்க்கு போட்டியா கவி பாடிக்கொண்டிருக்கிறாராம்.. இருவரும் மீதும் மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் போனதால ரகசியமா விசாரணை நடந்துகிட்டு இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post மாற்றப்பட்ட மாவட்ட தலைவரும், ஆதரவாளர்களும் சுருட்டியது வரை போதும் என சைலண்ட் மோடுக்கு போனதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.