
விசாகப்பட்டினம்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அனிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். இதில் மார்க்ரம் 15 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அதிரடி ஆட்டக்காரர் பூரன் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
மார்ஷ்-பூரன் இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சிக்சர் மழை பொழிந்த மிட்செக் மார்ஷ் 72 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக ஆடிய பூரன் 24 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 75 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து களம் இறங்கிய ஆயுஷ் பதோனி 4 ரன்னிலும், ஷர்துல் தாக்கூர் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 209 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பூரன் 75 ரன்னும், மார்ஷ் 72 ரன்னும் எடுத்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் ஆட உள்ளது.