
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் நடந்த 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
17 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் 2008ம் ஆண்டு சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியது. அதன்பின், பெங்களூருவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சென்னை வெற்றிபெற்றது. சென்னை அணியின் கோட்டையாக சேப்பாக்கம் திகழ்ந்தது . தற்போது 17 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு வெற்றிபெற்றுள்ளது.
சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள்;-
பெங்களூரு அணியின் அதிரடி பேட்டிங்;-
பெங்களூரு அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர் பிலிப் சால்ட் அதிரடி ஆட்டம் அணிக்கு உத்வேகத்தை அளித்து ரன் குவிப்பை ஊக்குவித்தது. விராட் கோலி 30 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் மட்டுமே எடுத்தபோதும் மற்ற வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரன் குவிப்பு;
பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் என்ற வலுவான இலக்கை எட்டியது.
தவற விடப்பட்ட கேட்ச்கள்;
பெங்களூரு பேட்ஸ்மேன்களின் கேட்ச்களை சென்னை வீரர்கள் தவறவிட்டனர். குறிப்பாக பெங்களூரு கேப்டன் படிதார் 2க்கும் மேற்பட்ட முறை கேட்ச் வாய்ப்பு வந்தபோதும் அந்த கேட்ச்களை பிடிக்க சென்னை வீரர்கள் தவறிவிட்டனர்.
தொடக்க வீரர்கள் மோசமான ஆட்டம்:
197 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ராகுல் திரிபாதி 3 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். 1.2 ஓவரில் திரிபாதி விக்கெட்டை பறிகொடுத்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்கள் இணை இன்னும் சரிவர அமையவில்லை.
மிடில் ஆர்டர் தடுமாற்றம்:-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். சாம் கரன், தீபக் ஹுடா, துபே உள்ளிட்ட வீரர்கள் இதுவரை சரிவர ஆடவில்லை.
வெற்றிபெறும் முனைப்பு;
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெறும் முனைப்பை தீவிரப்படுத்தவில்லை. பவர்பிளே முடிவதற்குள் 4.4 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை 26 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால், விக்கெட் வீழ்ச்சியை தடுக்க போராடிய சென்னை வெற்றிபெறும் முனைப்பை தீவிரப்படுத்தவில்லை.
அதிரடி பேட்ஸ்மேன் குறைபாடு;
சென்னை அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் அதிரடி பேட்ஸ்மேன்கள் குறைபாடு நிலவி வருகிறது. பவர் ஹிட்டர் எனப்படும் அதிரடி பேட்ஸ்மேன்கள் இல்லாததால் கடினமான ரன்களை சேஸ் செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
டோனியின் ஆட்டம்:
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோது விக்கெட் வீழ்ச்சியை தடுக்க டோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜடேஜா, அஸ்வினுக்கு அடுத்து 9வது விக்கெட்டிற்கு டோனி களமிறங்கினார்.
தொடக்க வீரர்கள் மாற்றியமைப்பு;
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவிந்திரா, ராகுல் திரிபாதி களமிறங்கி விளையாடி வருகின்றனர். ஆனால், ராகுல் திரிபாதி கடந்த 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடவில்லை. இதனால், தொடக்க வீரர்களை மாற்றியமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவிந்திராவுடன் கான்வேவை களமிறக்கி தொடக்க வீரர்கள் பவர்பிளே ஓவரில் விக்கெட்களை இழக்காமல் இருந்தால் அணியின் ரன்களை உயர்த்த வாய்ப்புகள் உருவாகலாம்.
ரசிகர்களின் ஆரவாரம்:
சேப்பாக்கத்தில் சென்னை ஆட்டத்தின்போது ரசிகர்கள் ஆரவாரம் எப்போது அதிகமாகவே இருக்கும். ஆனால், கடந்த சீசனிலும், நடப்பு சீசனிலும் ரசிகர்கள் சென்னை அணி வீரர்களை உற்சாகப்படுதுவதற்கு மாறாக டோனியை மட்டுமே கவனத்தில் கொள்வதுபோல் தோன்றுகிறது.
டோனி களமிறங்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளபோதும், ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் களமிறங்கி அணிக்காக விளையாடும்போது அவர் அவுட் ஆனவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். அடுத்து டோனி களமிறங்குவார் என்பதற்காக ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்களோ? என்ற எண்ணம் மனதளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். மற்ற வீரர்கள் மனதளவில் ஏமாற்றம் அடையும்போது அது அணியின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஆகையால், இந்த பிரச்சினைகளை கலைந்து ஒட்டுமொத்த அணியாக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வீரர்கள் செயல்பட்டு, ரசிகர்கள் ஆதரவு இருக்கும்பட்சத்தில் அடுத்தடுத்து வரும் ஆட்டங்களில் சென்னை அணி வெற்றிபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.