சென்னை: மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் உறுதியோடு அனைவரும் பங்கேற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் 8 தொகுதிகளை வெட்டிக் குறைக்கும் என அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ஏற்று தமிழ்நாடு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதனையொட்டி பல துறைகளிலும் முன்னேறி முதன்மை இடத்தை வகித்து வருகிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டும் அரசியல் தளத்தில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் சட்டப்படி தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல்
வஞ்சித்து வருகிறது. பள்ளிக் கல்வியில் இந்தி மொழியை பலவந்தமாக திணித்து, தமிழ் மொழிக்கு கேடு செய்யும் நிபந்தனைகளை விதித்து, அமைதி நிலையை சீர்குலைத்து வருகின்றது. இந்தச் சூழலில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் 8 தொகுதிகளை வெட்டி எடுத்து 31 தொகுதிகளாக குறைத்து விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பாக வரும் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து, பதிவு செய்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்கிறது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் ஒலிக்காமல் தடுக்கும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயலை தடுத்து நிறுத்த, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு முகமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற அரசியல் உறுதியோடு அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், அரசின் அழைப்பை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு தெரிவித்தார்.
The post மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் உறுதியோடு அனைவரும் பங்கேற்க வேண்டும்: முத்தரசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.