ராமேஸ்வரம்,
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் ராமேசுவரம் கோவிலிலும் ஆண்டுதோறும் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணை அன்று கோவிலில் இருந்து சாமி-அம்பாள் எழுந்தருளி நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு படி அளக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிலையில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 3.30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்று காலை7 மணிக்கு சாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்
தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் எழுந்தருளி வீதி உலா வரும் சாமி பின்னர் பகல் 12 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு செல்லும். இதனால் நாளை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்றும் அந்த நேரம் பக்தர்கள் தீர்த்தம் நீராடவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.