
பெங்களூரு,
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2029 மற்றும் 2031-ம் ஆண்டில் நடத்தப்படும் இடங்கள் விவரம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்படுகிறது. இந்த போட்டிகளை நடத்த விரும்பும் அதன் உறுப்பு நாடுகள் அக்டோபர் 1-ந்தேதிக்குள் உலக தடகள சம்மேளனத்திடம் தெரியப்படுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் கோருவதற்கான இறுதி விண்ணப்பத்தை 2026-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த போட்டியை நடத்த இந்தியா ஆர்வம் காட்டுகிறது. இது குறித்து உலக தடகள சம்மேளன துணைத்தலைவரும், இந்திய தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான அதில் சுமரிவாலா கூறுகையில், "இதற்கான நடைமுறைகளை தொடங்க இன்னும் கால அவகாசம் உள்ளது. ஆனால் போட்டிக்கான உரிமம் கோரி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்ளோம். இவ்விரு போட்டிகளையும் நடத்தும் வாய்ப்பு யாருக்கு? என்பது ஒரே நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் எந்த போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்தாலும் பரவாயில்லை" என்று கூறினார்.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்த இந்தியா முயற்சித்து வருகிறது. அதற்கு முன்னோட்டமாக உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரை நடத்த இந்தியா ஆர்வம் காட்டுகிறது.