நாம் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முற்படுவோம். வெற்றி பெறுவதற்கு பல வகையிலும் முயல்வோம். ஆனால் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் அந்த வெற்றியை நமக்கு கொண்டு வந்து சேர்க்காது என்பதுதான் நிஜம்.வெற்றி பெற அந்த நபர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மனத்தளவிலும், உடல் ரீதியிலும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் உரிய முயற்சி மேற்கொண்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். வாழ்க்கையில் வெற்றி அடைய முயற்சி செய்யும் போது ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை காட்டுங்கள். சில விஷயங்களை தள்ளிப்போடும் பழக்கத்தையும் மாற்றுங்கள். நீங்கள் சில வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். சில விஷயங்களை இரவில் செய்யக்கூடாது. அந்த வகையில் மாலை மற்றும் இரவு 7 மணிக்கு மேல் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
சிறிறு நேரம் யோசியுங்கள்
நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்தீர்கள் மற்றும் சாதித்தீர்கள் என்பதை நினைவில் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களை சிரிக்க வைத்த விஷயங்கள், உங்களுக்கு சவால் விடுத்த தருணங்களைப் பற்றி சிந்தியுங்கள். அன்று நீங்கள் செய்த அனைத்தையும் நினைவுபடுத்திப் பாருங்கள். இது சில விஷயங்களை புரிந்து கொள்ள உதவும். உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு.
மொபைல் பார்ப்பதைக் குறைக்கவும்
தொலைபேசியின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. தொலைபேசியிலேயே சமூக ஊடகங்களை ஸ்க்ரொலிங் செய்வது மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்களைப் பார்ப்பது, இரவு 7 மணிக்கு மேல் படம், சீரீஸ் பார்ப்பதை நிறுத்துங்கள். இரவு 7 மணிக்கு மேல் செல்போன் பார்ப்பதை நிறுத்துங்கள். திரைகள் உங்கள் தூக்கச் சுழற்சியை சீர்குலைக்கும். தொலைபேசியிலிருந்து நீல ஒளி வெளியிடப்படுவதே இதற்கு காரணம். படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இணையத்திலிருந்து உங்களை விலக்கிகொள்ள முயற்சி செய்யுங்கள். புத்தகத்தைப் படியுங்கள். இதமான வெந்நீரில் குளிக்கலாம்.
அடுத்த நாள் என்ன செய்வது?
அடுத்த நாள் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலை முன்கூட்டியே சிந்தியுங்கள். அடுத்த நாளுக்கான விஷயங்களைத் திட்டமிடத் தொடங்குங்கள். அடுத்த நாள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளை குறித்துக் கொள்ளுங்கள். செய்ய வேண்டிய முக்கிய பணிகள் முழுமையான அட்டவணையை
நிர்வகிக்கவும்.
சுவாசப் பயிற்சி
இரவு 7 மணிக்கு ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை செய்யுங்கள். இது உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது. இது உங்களுக்கு ஒரு நல்ல இரவுத் தூக்கத்தைத் தருகிறது. உங்கள் மனதிற்கு அமைதி அளிக்கவும், ஓய்வெடுக்கவும் தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை முயற்சி செய்யவும்.
சுய பாதுகாப்பு
இரவு 7 மணிக்கு பிறகு சுயகவனிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் சருமத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். சுய பாதுகாப்பு உங்களுக்கு மிகவும் முக்கியம். இது உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இரவு 7 மணிக்கு முன் சாப்பிட திட்டமிடுங்கள். இரவில் குறைந்த பட்சம் 10 மணிக்குள் தூங்கும் பழக்கத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்
பொதுவாக பல குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் மாலை மற்றும் இரவு வேளைகளில்தான் நிகழும். காரணம் நாள் முழுக்க வேலைப்பளு, அலுவலக அழுத்தம், என முடிந்து வரும் வேளையில் சாதாரண கேள்விகள், செயல்பாடுகள் கூட நம்மை எரிச்சலாக்கும். அந்த நேரத்தில் முன்கூட்டியே நாம் காலையில் ஏதேனும் தவற விட்டுவிட்டோமா, அல்லது ஏதேனும் தவறு நடந்ததா போன்ற சிந்தனைகளுடன் அதற்கு தீர்வு காணும் நோக்கில் வீட்டிற்கு வரலாம். மேலும் வீட்டில் இருப்போர் ஏதேனும் சண்டை, கேள்வி என ஆரம்பித்தால் கூட முதலில் காது கொடுத்துவிட்டு நீங்கள் பேசுவதும் நலம். மேலும் வெளியிலிருந்து வருவோரிடம் எடுத்த எடுப்பிலேயே கத்தி, சண்டையிடுவதை விட நம் குடும்பம், நம் பிரச்னை என அமர்ந்து பேசி சிரித்து மகிழ்ந்து படுக்கைக்குச் செல்ல பாதி மன அழுத்தம் நீங்கும். குழந்தைகள் ஏதேனும் சொல்ல, காண்பிக்க முயற்சி செய்தால் ஒரு 30 நிமிடங்கள் நேரம் கேளுங்கள். கை, கால் முகம் கழுவி, சிற்றுண்டி, காபி என முடித்து வருகிறேன் என பேசுங்கள். எடுத்த உடனேயே கத்தி விரட்டாதீர்கள்.
விளக்குகள் இல்லா அல்லது அரை இருட்டு மொட்டை மாடி
செலவே இல்லாத ஓய்வு அறை நம் வீட்டின் மொட்டை மாடிதான். விளக்குகள் இல்லா அரை இருட்டில் குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்து பேசிப் பாருங்கள். மிக அற்புதமான இரவு கிடைக்கும். கொஞ்சம் தின்பண்டங்கள், காபி, அல்லது டீயுடன் மொட்டை மாடி மாலை வேளைகளை இப்போதைய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறது. ஆனால் மிகப்பெரும் வரப் பிரசாதம் இந்த மொட்டை மாடிகள். யாருமே இல்லை என்றால் கூட சிறிது நேரம் பாடல்கள் கேட்கலாம். அல்லது ஆடியோ கதைகள் கேட்கலாம். குறிப்பாக பெண்கள் உங்களுக்கான நேரம் பெற இந்த மொட்டை மாடிகள் சிறப்பான இடம். இப்படி கிடைக்கும் மாலைநேரத்தையும், இரவுநேரத்தையும் எல்க்ட்ரானிக் திரைகளில் வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்ற ஆரோக்கியமும், மன மகிழ்வும், தானாகக் கிடைக்கும்.
– கவிதா பாலாஜிகணேஷ்
The post மாயம் செய்திடும் மாலை நேரத்தை மிஸ் செய்யாதீங்க! appeared first on Dinakaran.