தர்மபுரி, ஏப்.3: சுட்டெரிக்கும் வெயிலால் தரமான மாம்பழம் சந்தைக்கு வர தாமதம் ஆவதால், தர்மபுரியில் மாம்பழ மொத்த வியாபார மண்டிகள் மூடிக்கிடக்கின்றன. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேரிலும், தர்மபுரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரிலும் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாம்பழ சீசன் துவங்கி உள்ளது. ஆனால், உயர்ரக மாம்பழங்கள் இன்னும் சந்தைக்கு விற்பனைக்கு வரவில்லை. மாம்பழ சீசன்களில் நூற்றுக்கணக்கான மாம்பழ மண்டிகள் திறந்திருக்கும். தற்போது சீசன் துவங்கியும், மா அறுவடை இன்னும் முழுமையாக துவங்கவில்லை. இதனால் மாங்காய் மண்டிகள் இன்னும் திறக்காமல் மூடிக்கிடக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மாங்காய் பிஞ்சுகள், மாமரத்தில் இருந்து வெம்பி, கருகி கீழே விழுகின்றன. கொத்து கொத்தாக தொங்க வேண்டிய மாமரத்தில், தற்போது தான் மாங்காய்கள் ஒன்று இரண்டாக காய்த்து தொங்குகிறது. இந்த பருவத்தில் கோடை மழை பெய்தால், பிடித்திருக்கும் எஞ்சிய பிஞ்சு மாங்காய்கள், பருத்து தரமான மாங்காய்களாக வர வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து மாம்பழ வியாபாரிகள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மாம்பழ சீசன் இருக்கும். தர்மபுரி மாவட்டத்தில், இதுவரை கோடை மழை பெய்யவில்லை. தற்போது பெங்களூரா ரக மாங்காய் அறுவடை தொடங்கியுள்ளது. மாங்காய்கள் சரியானபடி அறுவடை செய்யப்படாததால், பெரும்பாலான மாங்காய் மண்டிகள் மூடியே இருக்கின்றன. கடந்தாண்டு இதே சமயத்தில், மாங்காய் அறுவடை துவங்கியதால், மாங்காய் மண்டிகள் சுறுசுறுப்பாக இயங்கின. தற்போது மாங்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் மாங்காய் மண்டிகள் திறக்கப்படவில்லை. கடைகளில் மாங்காய் ஊறுகாய், ஜூஸ் போட விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாங்காய் வெப்பத்தின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவை. இப்போது மழை பெய்தால் மரத்தில் உள்ள மாங்காய்கள் நல்ல தரமான மாம்பழமாக வர வாய்ப்பு உள்ளது,’
என்றனர்.
The post மாம்பழம் வரத்து தாமதம் appeared first on Dinakaran.