மாநிலத் தகுதித்தேர்வுக்கான (செட்) முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

3 hours ago 1

சென்னை,

மாநிலத் தகுதித் தேர்வினை (செட்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்திட ஆணை வெளிடப்பட்டது. யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு வருகின்ற 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வழித்தேர்வு (Computer Based Test) மூலம் அனைத்து மாவட்டங்களிலும் 133 தேர்வு மையங்களில் 99,178 தேர்வர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கான நுழைவுச்சீட்டு மற்றும் பயிற்சி தேர்வுக்கான இணையதளம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (https://www.trb.tn.gov.in) 27.02.2025 அன்று வெளியிடப்பட்டது. இதுவரையில், 67,865 தேர்வர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு தொடர்பான சந்தேகங்களை தேர்வர்கள் கேட்டு தெளிவுபெற தொலைபேசி வாயிலான உதவி மையம் 7 பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது. தேர்வர்கள் 1800 425 6753 என்ற இலவச உதவி எண் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு தங்கள் தேர்வு சம்பந்தப்பட்ட குறைகள் மற்றும் சந்தேகங்களை தெளிவு பெற்றுக் கொள்ளலாம். மேலும், துணை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான நேரடி உதவிமையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இத்தேர்வினை எந்தவித தடைகளும் இல்லாமல் நடத்திட தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் காணொளிக் காட்சி வாயிலாக இன்று கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்வு சிறப்பாக நடத்திட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ச.ஜெயந்தி மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

Read Entire Article