மதுரை: ‘ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் பிராமணர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.