
சென்னை,
மதுரையைச் சேர்ந்த சபரிகாந்தன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தனது மகன் சுகுமார் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சுகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்ற முறை விசாரணைக்கு வந்தபோது, பல குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட போலீசார் ஏன் மனுத்தாக்கல் செய்வதில்லை என குறிப்பிட்டு, தமிழக சட்ட ஒழுங்கு பிரிவின் உதவி காவல்துறை தலைவர் விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக சட்ட ஒழுங்கு பிரிவின் உதவி காவல்துறை தலைவர் ஸ்ரீநாதா நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பான சுற்றறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஜூன் வரை 355 ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. 790 மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 1,181 மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.
அரசுத்தரப்பில் கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கு தொடர்பாக நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.