சென்னை : மாநில உரிமைகளை பாதுகாக்கும் பணிக்காக நான் ஊதியம் பெறப் போவதில்லை என்று நீதியரசர் குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். ஒன்றிய, மாநில அரசுகளின் உறவை மேம்படுத்த நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் நேற்று குழு அமைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த பரிந்துரைகளை இக்குழு வழங்கும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். மாநில உரிமையை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீதிபதி குரியன் ஜோசப், “60 ஆண்டுக்கு முன் இதே காரணங்களுக்காக அப்போதைய முதல்வர் கலைஞர், நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்தார். மாறி வரும் காலங்களில் இந்திய அரசியலமைப்பு என்னவாக இருக்க வேண்டும்; அதில், மத்திய மாநில அரசுகளின் உறவு எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆய்வு செய்வதில் தேவை இருக்கிறது.மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம்;
இதற்கு என்னை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த பணிக்காக எந்த ஊதியமும் பெற மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோளாக முன்வைத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். மாநில சுயாட்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு வெளிப்படைத் தன்மையோடு செயல்படும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் குழுவின் செயல்பாடுகள் அமையும். மாநில சுயாட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு சட்ட விதிகள் ஆராயப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post மாநில உரிமைகளை பாதுகாக்கும் பணிக்காக நான் ஊதியம் பெறப் போவதில்லை : நீதியரசர் குரியன் ஜோசப் அறிவிப்பு!! appeared first on Dinakaran.