மாநில உரிமைகளுக்காக போராடுவதால் பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தனிக்கோபம் : அமைச்சர் ரகுபதி

4 hours ago 3

சென்னை : மாநில உரிமைகளுக்காக போராடுவதால் பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தனிக்கோபம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சோதனை குறித்து சென்னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில், “கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுக் கட்சிகளின் ஆட்சிக்கு தொல்லை தந்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. மாற்றுக் கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் பழிவாங்க மாட்டோம் என்று கூறிய பாஜக, அதற்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அமலாக்கத்துறையை கேடயமாக பாஜக பயன்படுத்தி வருகிறது. எந்த தவறுக்கும் முதலமைச்சர் இடம் கொடுக்க மாட்டார்.

ED, சிபிஐ போன்ற ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவி பாஜக அரசு பழிவாங்குகிறது. அமலாக்கத்துறை அச்சுறுத்தலால் பாஜகவில் சேர்ந்தால் வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. மாற்றுக் கட்சியில் இருந்தபோது ED நடவடிக்கைக்கு ஆளானவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் வழக்கு முடிக்கப்படுகிறது. ஊழல் செய்தவர்கள் பாஜகவில் இணைந்ததும் புனிதர்களாகி விடுகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாகிறார்கள், அவர்கள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல.

தமிழ்நாட்டின் நலன்களுக்கான ஒன்றிய அரசு நிதி தர மறுக்கிறது; அதற்காக பாஜகவினர் போராடுவார்களா?. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.3000 கோடி நிதியை பாஜக அரசு தர மறுக்கிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.2,152 கோடியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் டெல்லி பாணியை நிறைவேற்ற பாஜக முயற்சிக்கிறது; அது ஒருபோதும் நிறைவேறாது. யார் மீது என்ன குற்றச்சாட்டுகளை வேண்டுமானாலும் கூறலாம்; ஆனால் அதை நிரூபித்துள்ளீர்களா?,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மாநில உரிமைகளுக்காக போராடுவதால் பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தனிக்கோபம் : அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Read Entire Article