சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (17.03.2025) வினா – விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன் : திருவாலங்காடு, அருள்மிகு வடாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயிலுக்கு திருமண மண்டபம் கட்ட அரசு முன்வருமா?
அமைச்சர் : பேரவைத் தலைவர் அவர்களே, திருவாலங்காடு, அருள்மிகு வடாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில் என்பது பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்ன சபை என்று அழைக்கப்படுகின்ற திருக்கோயிலாகும். காரைக்கால் அம்மையார் இல்லற வாழ்வை துறந்து துறவியாக முக்தி பெற்ற திருக்கோயில் என்பதால் ஐதீகப்படி திருமணம் போன்ற சுப காரியங்கள் இந்த திருக்கோயிலை மையப்படுத்தி நடத்துவதில்லை. ஆகவே சுப நிகழ்ச்சிகள் நடத்திடாத சூழ்நிலையில் திருமண மண்டபம் அங்கு கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன் : பேரவைத் தலைவர் அவர்களே, முதல்வர் அவர்களை வணங்கி என்னுடைய திருவள்ளூர் தொகுதியிலேயே இருக்கின்ற திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை பற்றி அமைச்சர் நன்றாக விவரித்தார். பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபை திருக்கோயில் மாந்திரீக பூஜை நடத்துவதற்கு உண்டான இடம். தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் சனிக்கிழமை வந்து மாந்திரீக பூஜை நடத்துகிறார்கள். அதற்கு கோயிலில் சிறிய இடம்தான் இருக்கிறது.
சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம் போன்ற நாட்களில் இங்கு வரக்கூடிய பக்தர்கள் தங்கக்கூடிய அளவிற்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் விடுதி ஒன்று அமைத்திட வேண்டும். அதனை முதல்வர் அனுமதி பெற்று அமைச்சர் ஆலோசித்து செய்வார் என நம்புகிறேன். அதுமட்டுமில்லாமல் அந்த கோயிலுக்கு போகின்ற வழியில் NH205ல் திருப்பாச்சூர் சிவன் கோயில் இருக்கிறது. அங்குள்ள குளத்தினை முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சீரமைத்து தண்ணீர் நிரப்பிட அடிக்கல் நாட்டி பணிகளை செய்தோம். திருப்பதிக்கு செல்கின்ற வழியாக உள்ளதால் அந்த பகுதியில் கழிப்பிட வசதி மற்றும் மண்டபம் அமைத்து தர வேண்டும் என கேட்டு அமைகிறேன்.
அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, அவரது கேள்வி என்பது திருமண மண்டபம் என்று இருந்ததால் அதற்கான பதிலை நான் சொன்னேன். உறுப்பினர் தற்போது மற்ற காரியங்கள் செய்வதற்காக மண்டபம் வேண்டுமென கேட்டிருக்கின்றார். உடனடியாக துறை அலுவலர்களை அனுப்பி ஆய்வு செய்து வாய்ப்பு இருந்தால் நிச்சயம் ஏற்படுத்தி தரப்படும். மகாசிவராத்திரி விழா என்பது கடந்த காலங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படாத நிலையில் வரலாற்றை மாற்றி அமைத்து 9 திருக்கோயில்கள் சார்பில் மகாசிவராத்திரி விழா நடத்திய பெருமை திராவிட மாடல் ஆட்சியையே சேரும். அந்த திருக்கோயில்களில் ஒன்றான திருவாலங்காடு, அருள்மிகு வடாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இந்தாண்டு மகாசிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
அதேபோல் முக்தி பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு விழா நடத்துவதற்கு ஏற்கனவே சட்டமன்ற அறிவிப்பு செய்திருந்தோம். அந்த விழாவும் இந்த மாதம் நடைபெறுகிறது. திருப்பாச்சூர் திருக்கோயில் குளமானது பஞ்சாயத்திற்கு சொந்தமான குளமாகும். ஆகவே நீங்கள் உள்ளாட்சி அமைப்பின் மூலம் அந்த குளத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன் : பேரவை தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்களின் பதிலுக்கு நன்றி. அவர் தங்கும் விடுதி கட்டித் தரப்படுமா என்பதை சொல்லவில்லை.
நிச்சயமா இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார் என்று நம்புகிறேன். கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சியில் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் இருக்கிறது. அதற்கு உபயதாரர்கள் முன்வந்து பணிகளை செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். எட்டு மாதமாக பணிகள் நடைபெறவில்லை. அதனை மாற்றி வேறு உபயதாரர்கள் மூலமாகவோ, அல்லது அரசே ஏற்று அந்த பணிகள் நடைபெறுமா என்பதனையும், மாதம்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைதரும் அந்த திருக்கோயிலுக்கு சொந்தமான குளத்தை சீர் செய்து அங்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடங்கள் கட்டித் தரப்படுமா என்பதைக் கேட்டு அமைகிறேன்.
அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் கூறிய அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் 25 லட்ச ரூபாய் செலவில் உபயதாரர் பணியை மேற்கொண்டு இருந்தார். உடல்நிலை சரியில்லாததால் இடையில் அந்த பணி தடை ஏற்பட்டது உண்மை தான். தற்போது அந்த பணி விரைவுபடுத்தப்பட்டு 80 சதவீத பணி நிறைவடைந்து இருக்கின்றது. இரண்டு மாதத்திற்குள்ளாக குடமுழுக்கை நிச்சயம் நிறைவேற்றி தருவோம். அதே வேளையில் திருக்குளத்தை சீரமைக்க மண்டல குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு, மாநில வல்லுநர் குழு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது. வெகுவிரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு அந்த குளம் சீரமைத்து தரப்படும்.
உறுப்பினர் கோரிய திருமண மண்டபமானது ஐதீக முறைப்படி அங்கே கட்ட முடியாத நிலை உள்ளதைதான் சொன்னேன். கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வாசகத்திற்கு பொருத்தமான இந்த ஆட்சியில் அவர் கோரிய மண்டபத்திற்கான பணிகளை மேற்கொள்வதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் துறை மேற்கொள்ளும். தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 85 திருக்கோயில்களுக்கு சுமார் 347 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபங்கள் கட்டப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருமண மண்டபங்களை அதிகளவு கட்டித் தருகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 4.20 கோடி ரூபாய் செலவில் நான்கு புதிய திருக்குளங்கள் உருவாக்கப்பட்டு வருவதோடு, ரூ.120 கோடி மதிப்பீட்டில் 220 திருக்குளங்கள் புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 200 ஆண்டுகளை கடந்தும் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நாமக்கல் போன்ற திருக்கோயில்களில் தெப்ப திருவிழா நடந்தப்பட்டதன் காரணமாக இறையன்பர்கள், அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர். அந்த வகையில் உறுப்பினர் கூறிய கோரிக்கை முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வாய்ப்பிருப்பின் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் விஜி ராஜேந்திரன் அவருடைய கேள்விக்கு பதில் பெற அமைச்சர் அவர்களும் சில விளக்கங்களை கேட்டார். அவர் கேள்வி கேட்கின்ற போது மாந்திரீக பூஜை பற்றி சொன்னார். மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று என்பதற்கு அமைச்சர் தக்க விளக்கத்தை அளிப்பாரா என்பதை கேட்க விரும்புகிறேன்.
அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, அவரும் ஆன்மீகவாதி. நீண்ட நெடிய படிக்கட்டுகளில் பல திருக்கோயில்களில் அவரது எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சுற்றி சுற்றி வருபவர். அவருக்கு தெரியாதது ஒன்றும் அல்ல. மாந்திரீகம் என்ற ஒரு வார்த்தை இந்த ஆட்சியில் திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் நடைபெறுவதில்லை. பரிகார பூஜையை தான் அவர் மாந்திரீக பூஜை என்று மாற்றி சொல்லிவிட்டார். பரிகார பூஜை மண்டபம் தான் கேட்டார். அந்த பரிகார பூஜை மண்டபம் ஏற்படுத்தி தரப்படும் என்பது முன்னாள் முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர், அருமை அண்ணன் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற வினா – விடை நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.