சென்னை: சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் 15,455 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (17.3.2025) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னையில் 34 திட்டப் பகுதிகளில் 16,888 அடுக்குமாடி குடியிருப்புகளும், தமிழ்நாடு முழுவதும் இதர மாவட்டங்களில் 100 திட்டப் பகுதிகளில் 30.041 அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம் 134 திட்டப்பகுதிகளில் ரூ.5,330 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னை மற்றும் சுற்றியுள்ள 48 திட்டப் பகுதிகளில் 15,455 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இக்குடியிருப்புகள். ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன். ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளன. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் 15,455 அடுக்குமாடி குடியிருப்புகள் உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டு. முதலமைச்சர் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கும் வகையில் அலுவலர்கள் தொடந்து ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை கண்காணித்திட தமிழ்நாடு துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், வாரிய திட்டப்பகுதிகளில் மின் இணைப்பு, குடிநீர் இனைப்பு, கழிவுநீர் இணைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியிருப்புகளில் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்கவும் துணை முதலமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா வாரிய செயலாளர் நா.காளிதாஸ், தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: துணை முதல்வர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.