
சென்னை,
எந்த தடைகளையும் தாண்டுவோம் எனக் கூறும் தி.மு.க அரசு மின் தடையை கூட தாண்டவில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் பாரதிதாசன் உருவப்படத்திற்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"மத்திய அரசு பல தடைகளை ஏற்படுத்துவதாக முதல்-அமைச்சர் சொல்கிறார். மத்திய அரசு எந்த தடையும் கொண்டு வரவில்லை, மாநில அரசுதான் மின்தடையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
முதலில் பகலில் ஓடிக்கொண்டிருந்த அணில் தற்பொழுது இரவில் ஓடுகிறதா? இரவில் ஓடும் அணிலை கண்டுபிடித்து மின்தடையை சரி செய்ய வேண்டும். மின்சாரத்துறை, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது "
இவ்வாறு அவர் தெரிவித்தார்.