மாநில அரசின் சார்பில் வரும் 2025-26ம் நிதியாண்டில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பு பட்ஜெட் தாக்கல்? ஆலோசனையை தொடங்கினார் முதல்வர்

3 hours ago 2

பெங்களூரு: கர்நாடக மாநில அரசின் சார்பில் வரும் 2025-26ம் நிதியாண்டில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார். மாநில அரசின் சொந்த வரி மற்றும் ஒன்றிய அரசின் மானியம் அதிகமாக பெறவும் திட்டமிட்டுள்ளார். மாநில அரசின் சார்பில் நடப்பு 2024-25ம் நிதியாண்டில் ரூ.3.71 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பை கூடுதலாக வகித்து வரும் முதல்வர் சித்தராமையா கடந்தாண்டு பிப்ரவரி 19ம் தேதி தாக்கல் செய்தார்.

இதில் மாநில அரசின் சொந்த வரிகளான வணிகம், கலால், பதிவு மற்றும் முத்திரைதாள், போக்குவரத்து ஆகிய துறைகள் மூலம் ரூ.1.89 லட்சம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டின் 9வது மாதத்தில் இருக்கும் நிலையில் நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பிட்டீல் 80 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது. மீதியுள்ள மூன்று மாதத்தில் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை மாநில நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ரூ.3.71 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, வரும் 2025-26ம் நிதியாண்டில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரி மூலம் ரூ.1.89 லட்சம் கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்ட முதல்வர், வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.2.10 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளார். இதன் மூலம் நடப்பு நிதியாண்டை காட்டிலும் வரும் நிதியாண்டில் கூடுதலாக ரூ.19 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

மேலும் வரும் நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரி மூலம் கூடுதலாக வரி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது போல், ஒன்றிய அரசின் மூலம் பெறப்படும் மானியத்தையும் அதிகமாக பெற முடிவு செய்துள்ளார் நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் செய்வதில் இரண்டாவது பெரிய மாநிலமாக கர்நாடகம் உள்ளது. நடப்பு நிதியாண்டில் தேசியளவில் ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதமாக இருக்கும் நிலையில், கர்நாடகாவில் 15 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் ஓன்றிய அரசின் சார்பில் கடந்த 2023-24ம் நிதியாண்டில் ரூ.37,252 கோடி ஜிஎஸ்டி வரி பங்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில் ரூ.40,280 கோடி கிடைத்தது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ஜிஎஸ்டி வரி பங்கு ரூ.44,485 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு வரும் 2025-26ம் நிதியாண்டில் ஒன்றிய அரசின் மூலம் ரூ.52 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி பங்கு பெற முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த 2023-24ம் ஆண்டில் ஒன்றிய அரசின் சார்பில் ரூ.13,005 கோடி மானியம் வழங்கப்பட்டது, நடப்பு நிதியாண்டில் ரூ.15,299 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

வரும் 2025-26ம் நிதியாண்டில் கூடுதலாக ரூ.2,500 கோடி என மொத்தம் ரூ.17,500 கோடி மானியம் பெற முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக வரும் 2025-26ம் நிதியாண்டில் மாநில சொந்த வரி மூலம் ரூ.20 ஆயிரம் கோடி, ஒன்றிய அரசின் மானியம் மூலம் ரூ.9,500 கோடி பெறுவதன் மூலம் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

முதல்வர் சித்தராமையா கடந்த 2023-24ம் நிதியாண்டில் ரூ. 3.27 லட்சம் கோடியும் 2024-25ம் நிதியாண்டில் ரூ.3.71 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் வரும் 2025-26ம் நிதியாண்டில் முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இது மாநில வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து தினமும் துறை ரீதியாக அமைச்சர்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாநில அரசின் சார்பில் வரும் 2025-26ம் நிதியாண்டில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பு பட்ஜெட் தாக்கல்? ஆலோசனையை தொடங்கினார் முதல்வர் appeared first on Dinakaran.

Read Entire Article