*வாகனஓட்டிகள் எதிர்பார்ப்பு
தியாகராஜநகர் : நெல்லை மாநகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இணைப்பு சாலை திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படுமா? அதன்வாயிலாக இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகர எல்லையை ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு கடந்து செல்ல பல மணி நேரம் செலவாகிறது.
குறிப்பாக டவுன், சந்திப்பு பாளை முருகன் குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சிறிய அளவிலான தற்காலிக சாலை விரிவாக்கம், ரவுன்டானா அமைப்பது போன்ற பணிகளே நடக்கின்றன.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை செல்லப்பாண்டியன் சிலை அருகே அண்ணசாலை டவுன் பார்வதி தியேட்டர் முதல் அருணகிரி தியேட்டர் வரையிலான இணைப்பு சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இத்தோடு தொடர்ச்சியாக தெற்கு பைபாஸ் சாலையில் இருந்து பாளை நேரு கலையரங்கம் வரை புதிய இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்பு சாலை திட்டம் பல்வேறு காரணங்களால் தள்ளி போனது பின்னர் முடங்கிவிட்டது.
இந்த சாலையை அமைத்தால் முருகன் குறிச்சி பகுதியில் போக்குவரத்து வெகுவாக குறையும் பாளை பகுதியில் இருந்து வண்ணார்பேட்டை சந்திப்பு பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள் இந்த இணைப்பு சாலையை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த சாலை அமைக்க மீண்டும் மாநகராட்சி திட்டமிட்ட செயல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதேபோல் பாளை. தெற்கு பைாஸ் சாலையில் இருந்து பாளை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதிக்கு முன்னதாக சற்று தள்ளி இணையும் வகையில் ‘டிடி- 2’ என்ற திட்டம் 2005ம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டு அதற்கான வரைபடம் உள்ளிட்டவை தயாரித்து செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டத்தை அமல் படுத்தும் போது குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக புதிய திட்ட மதிப்பீடு மற்றும் அமைக்கும் வரைபடங்கள் தயாரிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கும் முன்னர் 2005ம் திட்ட இணைப்பு சாலையை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக நெல்லை மாநகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இணைப்பு சாலை திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படுமா? அதன்வாயிலாக இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா? என வாகன ஓட்டிகள் உள்ள அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
இதுகுறித்து ஓய்வுபெற்ற கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குநர் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி கூறுகையில் ‘‘நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்காக புதியதாக சாலை விரிவாக்கம் திட்டத்தை தேடி அலைவதை விட ஏற்கனவே திட்டமிடப்பட்ட இணைப்பு சாலை திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகளில் தற்போதைய போக்குவரத்தை விட மேலும் அதிக அளவில் நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கிடப்பில் உள்ள இணைப்பு சாலை திட்டங்களை நிறைவேற்ற மாவட்ட மாநகர நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து முறையான அறிவிப்புகளை உடனடியாக வெளியிட வேண்டும்’’ என்றார்.
The post மாநகரில் நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இணைப்பு சாலை திட்டம் அமல்படுத்தப்படுமா? appeared first on Dinakaran.