மாநகரில் 3 பஸ் நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

3 weeks ago 5

*மாமன்ற கூட்டத்தில் கமிஷனர் அறிவிப்பு

ேகாவை : கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 130 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின்னர் விவாதம் துவங்கியது.

கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ் (72வது வார்டு), சரவணகுமார் (69வது வார்டு), காயத்ரி (44வது வார்டு), பிரபாகரன் (47வது வார்டு) ஆகியோர் பேசுகையில், ‘‘கோவை சாயிபாபாகாலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை, அச்சாலையில், தெற்கு பகுதியில் அன்னபூர்ணா ஓட்டல் வரையிலும், வடக்கு பகுதியில் சங்கனூர் சாலை சந்திப்பு போலீஸ் செக் போஸ்ட் வரையிலும் நீட்டிக்க வேண்டும்’’ என்றனர்.

45வது வார்டு கவுன்சிலர் பேபிசுதா பேசுகையில், ‘‘சாயிபாபாகாலனி பகுதியில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பஸ் நிலையம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதையும் முழுமையாக பராமரிக்க வேண்டும். அதிகாரிகள், வார்டுகளுக்குள் ஆய்வுப்பணிக்கு வரும்போது, அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி பேசுகையில், ‘‘26வது வார்டில் பாழடைந்து கிடக்கும் பூங்காக்களை போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த வேண்டும். சாக்கடை கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு, மழைநீர் வடிகால் பாதையை சீரமைக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை இருபுறமும் அகற்ற வேண்டும்’’ என்றார்.

100வது வார்டு கவுன்சிலரும், மாமன்ற ஆளும்கட்சி குழு தலைவருமான இரா.கார்த்திகேயன் பேசுகையில், ‘‘வெள்ளலூர் குப்பை கிடங்கு காரணமாக சுற்றுவட்டார பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதியுறுகின்றனர். சுற்றுவட்டார பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். வார்டு முழுவதும் தெருவிளக்கு பராமரிப்பில் தொய்வு ஏற்படுகிறது. இதை சீர்படுத்த வேண்டும்’’ என்றார்.

72வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் பேசுகையில், ‘‘கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை மருதமலை கோவில் அடிவாரத்தில் இருந்து துவக்கி, ஆர்.ஸ்.புரம் வழியாக கொண்டு செல்ல வேண்டும் ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி, சங்கனூர் பள்ளம் அருகில் தனியாக சூளை அமைத்து கொடுக்க வேண்டும். தமிழக அரசு திட்டங்களை கோவை மாநகர மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்போல் சிக்ஸர் விளாசுகிறார்’’ என்றார்.

5வது வார்டு கவுன்சிலர் நவீன்குமார் பேசுகையில், ‘‘கடந்த 2008ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபு வைத்த கோரிக்கையின்படி, அன்று பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம் என்கிற உன்னதமான திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சி மேம்பாட்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கி தந்தார்.

அதன் மூலம் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது மறைவுக்கு இந்த மாமன்றம் புகழஞ்சலி செலுத்தியது, நன்றி மறவா செயல் ஆகும்’’ என்றார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், ‘‘கோவை மாநகரில் உக்கடம் மேம்பாலம் பணி காரணமாக சிதையுண்ட உக்கடம் பஸ் நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு, கிழக்கு பகுதி, மேற்கு பகுதி என இரண்டு பஸ் நிலையங்கள் கட்டுவதற்கும், மிகவும் பழுதடைந்துவிட்ட காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்டுவதற்கும் மொத்தம் ரூ.50 கோடி நிதி, அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

விரைவில் கட்டுமான பணி துவங்கும். அதேபோல், அடுத்தக்கட்டமாக, ரூ.10 கோடியில் சிங்காநல்லூர் பஸ் நிலையம், அதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பஸ் நிலையம் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாநகரில் தெருவிளக்கு பராமரிப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் நீக்கப்படும். பீளமேடு தண்ணீர்பந்தல் ேராட்டில் எஸ்-பெண்ட் வளைவில் உள்ள வீடு, கடைகளை அகற்றிவிட்டு, இழப்பீடு தொகை வழங்கவும், அச்சாலையை புதுப்பிக்கவும் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் இருந்து ரூ.54 கோடி பெறப்பட உள்ளது’’ என்றார்.

மேயர் ரங்கநாயகி பேசுகையில், ‘‘மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும்போது, அந்தந்த கவுன்சிலர்களுக்கு முறையாக தகவல் தெரிவிப்பதில்லை. மக்கள் பணியாற்றும்போது, கவுன்சிலர்களுடன் இணைந்து, அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில், அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

காய்கறி சந்தையாக மாறும் வெள்ளலூர் பஸ் நிலையம்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் செட்டிபாளையம் சாலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே ஒருங்கிணைந்த பஸ் நிலையம், மாநகராட்சிக்கு சொந்தமான 61.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.52.46 கோடியில், மாநகராட்சி பொது நிதியில் இருந்து கட்டப்பட்டு, தற்போது பயன்பாடு இல்லாத நிலையில் உள்ளது. சென்னைக்கு அடுத்து பெரிய நகராக வளர்ந்துள்ள கோவையில், சென்னை கோயம்பேடு போன்ற பெரிய காய்கறி மற்றும் பழங்களுக்கான ஒருங்கிணைந்த மொத்த விற்பனை சந்தை இல்லை.

எனவே, இப்பஸ்நிலையத்தின் பயன்பாட்டை மாற்றி, இங்கு மொத்த காய்கறி அங்காடிகள், மொத்த பழ அங்காடிகள், கனரக வாகன பதிவு அலுவலகம், பார்சல் அலுவலகங்கள், கனரக வாகனம் நிறுத்தும் இடம் போன்றவை அமைக்கப்படும். இதன்மூலம், 22 லட்சம் மக்கள் தொகை ெகாண்ட கோவை மாநகராட்சி மக்களும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 14 லட்சம் மக்களும் பயன்அடைவார்கள். மேற்கண்ட தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேறியது.

5 பேருக்கு இரங்கல் தீர்மானம்

மாமன்ற கூட்டம் துவங்கியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், கோவை தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன், மாநகராட்சி 56வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் மோகன்குமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மேயர் ரங்கநாயகி தீர்மானம் கொண்டுவந்தார். இதை ஏற்று, அனைத்து கவுன்சிலர்களும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

கருப்பு பேட்ஜ் அணிந்த காங். கவுன்சிலர்கள்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சரவணகுமார், நவீன்குமார், சங்கர், காயத்ரி, சாந்தாமணி, சுண்டக்காமுத்தூர் முருகேசன், சரளா ஆகிய காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்

47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் பேசுகையில், ‘‘வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணிக்கு ரூ.168 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், இதுவரை ரூ.52.60 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், பணி முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது.

இப்பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். காய்கறி சந்தை உள்ளிட்ட இதர பயன்பாட்டுக்கு, இப்பஸ் நிலையத்தை மாற்றக்கூடாது. மாநகரில், சொத்து வரி விதிப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ‘’டிரோன் சர்வே’’ பணியை நிறுத்த வேண்டும். தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். அதன்பிறகும் அவர், தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

இதற்கு, மாநகராட்சி மண்டல தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), மீனா லோகு (சென்ட்ரல்), கதிர்வேல் (வடக்கு), பணிக்குழு தலைவர் சாந்தி முருகன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘‘ஒரே கவுன்சிலர் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி? மற்ற கவுன்சிலர்கள் பேச வேண்டாமா? எனக்கூறினர். இதனால், கோபமுற்ற அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், தனது இருக்கையை விட்டு எழுந்து, மேயர் நாற்காலி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

அவருக்கு ஆதரவாக, அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், ஷர்மிளா ஆகியோரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இத்திடீர் போராட்டம் காரணமாக மாமன்ற கூட்டம் நடத்துவதில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், அடுத்த 2 கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது என மேயர் ரங்கநாயகி அறிவித்தார். அதனால் அவர், வெளிநடப்பு செய்தார். அவருடன், மற்ற 2 அதிமுக கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

The post மாநகரில் 3 பஸ் நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Read Entire Article