முசிறி, ஜன. 25: முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் வாணி மேற்பார்வையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை தீபா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை வாணிஸ்ரீ, ஆசிரியர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் கவிதா மாணவ மாணவிகள் மத்தியில் பெண்களுக்கு சட்டத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சுய கட்டுப்பாடு , கல்வியின் சிறப்பு வேலைவாய்ப்பு, நல்ல பழக்க வழக்கங்கள் பண்புகளுடன் வளருதல் குறித்து அறிவுறுத்தி பேசினார். மேலும், தமிழக அரசினால் செயல்பாட்டில் உள்ள 181, 1098, 1091 என்ற தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து தகவல் கூறினால் பெண்களுக்கு எதிரான குற்றத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குழந்தை திருமணம், போதை புகையிலை பயன்பாடு, பிறரால் தொந்தரவு ஏற்படும் போது மேற்கூறிய பாதுகாப்பு எண்ணை தொடர்பு கொண்டு முழு பாதுகாப்பையும் பெற இயலும் என விரிவாக எடுத்துரைத்தார். மாணவிகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குட் டச் ,பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post முசிறி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.