மாநகராட்சி நிலைக்குழு கூட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரி பங்கேற்க வேண்டும்: மேயர் பிரியா உத்தரவு

1 week ago 2

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், நேற்று நடந்தது. மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: சதீஷ்குமார் (திமுக): மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து வார்டு குழு எடுக்கும் முடிவை நிலை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். நிலைக்குழு கூடி அதை முடிவு செய்து மாமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு தீர்மானம் நிறைவேற்றி திட்டங்களை செயல்படுத்துவர்கள். ஒவ்வொரு நிலை குழுவிலும் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட நிலை குழு கூட்டங்களில் உயர் அதிகாரிகள், மண்டல அதிகாரிகள் பங்கேற்பதில்லை. எப்போது கேட்டாலும் ஆன்லைன் மீட்டிங் உள்ளது என கூறுகின்றனர். எனவே நிலைக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்த வேண்டும்.

நிலைக்குழு தலைவர் இளைய அருணா: எப்போது கூட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி பங்கேற்பதில்லை. அவர்களிடம் இதுபற்றி கேட்டால் ஆணையாளர் அனுமதி தரவில்லை என்கிறார்கள். கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கூறினால். 15 நிமிடத்துக்குள் வருவதாக கூறுகிறார்கள். ஆனால் வருவதில்லை. நிலைக்குழு தலைவர் சிற்றரசு: நிலைக்குழு கூட்டத்துக்கு மண்டல அதிகாரிகள் கூட வருவதில்லை. செயற்பொறியாளரை அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் அந்தந்த வார்டுகளுக்கு சம்பந்தமில்லாதவர்கள். அவர்களுக்கு எப்படி அந்தந்த பகுதி பிரச்னைகள் தெரியும். நிலைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். இதே நிலமை நீடித்தால் நிலைக்குழு கூட்டங்களை நாங்களும் புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை.

மேயர் பிரியா: சென்னை மாநகராட்சியில் 4 துணை ஆணையர்கள், பல ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இங்கு பணிகள் அதிகம் என்பதால் அரசு நமக்கு ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனர். நிலைக்குழு கூட்டங்களில் கண்டிப்பாக அதிகாரிகள் பங்கேற்பது தான் மரபு. ஆனால் அதிகாரிகள் பங்கேற்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்பு என்ன நடைமுறை இருந்ததோ அதன்படி தான் நடக்க வேண்டும். கண்டிப்பாக உயர் அதிகாரிகள், குறிப்பாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவது நிலைகுழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். ஆணையர் இதை அறிவுறுத்த வேண்டும். நிலைக்குழு கூட்டங்கள் மாதம் ஒரு முறை நடக்கிறது. இதுபற்றி முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அவர்கள் கலந்து கொள்வதில்லை என்கிறார்கள். இதற்கு பிறகும் நிலைக்குழு கூட்டங்களில் அதிகாரிகள் பங்கேற்காமல் இருந்தால் நன்றாக இருக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன்: நாங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணியாற்றி வருகிறோம் கடந்த காலத்தில் கல்வி, பூங்கா, விளையாட்டு மூன்றும் ஒரே நிலைக் குழுவில் இருந்தது. இந்த துறையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்களை தனியார் ஒருவர் டெண்டர் எடுத்து சரியாக மாநகராட்சிக்கு பணம் கட்டாமல் இருந்தார். அதை அவரிடமிருந்து மீட்டு இன்று நல்ல முறையில் நடைபெறுகிறது. இதற்கு காரணம் எங்கள் குழு தான். எங்களது நிலைக் குழுவில் இருந்து பூங்காவை பிரித்து மற்ற துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன்: வட சென்னை பகுதியில் பல இடங்களில் சாலையில் கன்டெய்னர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை சந்திப்புகளில் பொதுமக்கள் கடந்து செல்ல போதிய முன்னெச்சரிக்கை கோடுகள் வரையப்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post மாநகராட்சி நிலைக்குழு கூட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரி பங்கேற்க வேண்டும்: மேயர் பிரியா உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article