சென்னை: சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் சிறக்க மத்திய அரசின் என்சிவிடி சான்றிதழுடன் கூடிய தொழிற் பயிற்சி 6 தொழில் பாடப்பிரிவுகளில், சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படுகிறது. அதன்படி, கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர், குழாய் பொருத்துநர் ஆகிய ஓராண்டு பாடப் பிரிவுகளும், பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம், மின்பணியாளர், எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய இரண்டாண்டு பாடப் பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும், மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை நடைபெறும்.
இந்த பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. முற்றிலும் இலவச பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்று தரப்படுகிறது.தகுதியுடைய மாணவர்களுக்கு ஒரு மாதம் ரூ.10,500 வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்களான இரண்டு செட் சீருடை, பஸ் பாஸ், புத்தகப் பை, பாடப்புத்தகம் மற்றும் வரைபடக்கருவிகள், பாதுகாப்பு காலணி, இருசக்கர மிதிவண்டி, பயிற்சி நேர இடைவெளியில் காலை, மாலை இருவேளை தேநீர், பிஸ்கட், மதிய உணவு மற்றும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.750 பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தினை, சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாக பெறலாம் அல்லது இணையதள முகவரி www.chennaicorporation.gov.in மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம், லாயிட்ஸ் காலனி, முத்தையா தெரு அருகில், ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியில் சமர்ப்பித்து சேர்க்கை பெறலாம். வரும் 15ம்தேதி சேர்க்கைக்கான கடைசி நாள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
The post மாநகராட்சி ஐடிஐயில் இலவச தொழிற்பயிற்சியில் சேர 15க்குள் விண்ணப்பிக்கலாம்:சென்னை பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை appeared first on Dinakaran.