சென்னை: திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி நோக்கி மாநகர தாழ்தள பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (55) என்பவர் டிரைவராகவும், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (45) நடத்துனராகவும் பணியில் இருந்தனர். பேருந்து திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு ஒரு வழிப்பாதையில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிரே வந்த கார் ஓட்டுநர் போக்குவரத்துக்கு இடையூறாக ஏன் இவ்வாறு ஒரு வழிப்பாதையில் வருகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர், மாநகர தாழ்தள பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதில் பேருந்து டிரைவருக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பேருந்து டிரைவர் நெடுஞ்செழியன் திருவள்ளூர் டவுன் போலீஸ் மற்றும் பூந்தமல்லியில் உள்ள மாநகர பேருந்து பணிமனை கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், போலீசார் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய கார் டிரைவரான மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த முரளி (37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாநகர பேருந்து உடைப்பு appeared first on Dinakaran.