*விரைந்து சீரமைத்திட கோரிக்கை
ஏரல் : பண்டாரவிளை -சுப்பிரமணியபுரம் இடையே குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இச்சாலையை விரைந்து சீரமைத்திட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பெருங்குளத்தில் இருந்து சாயர்புரம் செல்லும் மெயின் ரோட்டில் பண்டாரவிளையில் இருந்து நட்டாத்தி வழியாக சுப்பிரமணியபுரம் வரையுள்ள சாலை, கடந்த 2023ல் பெய்த அதிகனமழையின் போது பெருக்கெடுத்த வெள்ளத்தால் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமானது.
மழை, வெள்ளத்தில் சேதமடைந்த இந்த சாலை, இதுவரை சீரமைக்கப்படாததால் சிவகளை, மாங்கொட்டாபுரம், பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை, நட்டாத்தி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சாயர்புரம் பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் ஏரலில் இருந்து பெருங்குளம் வழியாக சாயர்புரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடிக்கும், இதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சிவகளை, பெருங்குளம், சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கும் இவ்வழித்தடத்தில் தான் பஸ் போக்குவரத்து நடைபெற்று வருவதால் தட்டுத்தடுமாறியே வாகனங்கள் சென்று திரும்புகின்றன.
கடந்தாண்டும் மழையின்போது இந்த ரோட்டை மழைநீர் கடந்து சென்றதால் சேதம் அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்துகளிலும் சிக்குகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போக்குவரத்துக்கு லாயக்கற்று சிதிலமடைந்து கிடக்கும் பண்டாரவிளை-சுப்பிரமணியபுரம் இடையேயான சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுப்பதை தடுக்க இவ்வழியில் உள்ள தாம்போதியை பாலமாக உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நட்டாத்தி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பண்டாரம் கூறுகையில், மழை காலத்தில் காட்டாற்று தண்ணீர் பெருக்கெடுத்து வரும்போது இங்குள்ள சிறியமடை வழி பாலம் வழியாக தண்ணீர் ஒரே நேரத்தில் செல்ல முடியாததால் பண்டாரவிளையில் இருந்து நட்டாத்தி வழி சுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் பல இடங்களில் ரோட்டில் முட்டளவுக்கு மேல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்படுவதோடு தார் ரோட்டிலும் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறுகிறது.
எனவே மழை காலத்தில் தண்ணீர் ரோட்டின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு செல்வதற்கு ஏற்ப அந்த இடங்களில் மேல்மட்ட பாலம் கட்டவும், தாழ்வான இடங்களில் சாலையை உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிதாக தார் ரோடு போடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும், என்றார்.
The post பண்டாரவிளை – சுப்பிரமணியபுரம் இடையே குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி appeared first on Dinakaran.