சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் கன்னியம்பாறை மற்றும் கூட்டுவாவுல் பாறைகளுக்கு இடையே சுமார் 1240 அடிநீளத்தில் தரை மட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் பிரமாண்டமாக தொட்டி பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டி பாலமாக உள்ளது. விவசாயிகளின் பாசன வசதிக்காகவும், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்காகவும் கட்டப்பட்டது.
தொட்டி பாலம் நுழைவு வாயில் அருகில் காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்ததை சமூக விரோத கும்பல் உடைத்து சேதப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்க கூடிய செயலாகும். காமராஜர் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைக்கும் தீய சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். அடிப்படை அறிவு இல்லாத சிலரின் தீய செயல்களால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவது தடுக்கப்படவேண்டும்.
காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படவேண்டும். அதே வேளையில் கல்வெட்டை உடைத்த சமூக விரோதிகளை கண்டறிந்து கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
The post மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைத்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்: என்.ஆர்.தனபாலன் அறிக்கை appeared first on Dinakaran.