மாதாமாதம் தலா ஒரு லட்சம் கப்பம் கட்டுமாறு உத்தரவு போட்ட பதிவுத்துறை பெண் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 hours ago 1

‘‘புதுச்சேரியில் புதுசா முளைத்த வளர்ச்சி ஆணையத்திற்கு எதிராக சங்கங்கள் போர்க்கொடி தூக்கியிருக்காங்களாமே தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் விளையாட்டுக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லாத நிலையில் சங்கங்கள் ஆதிக்கம் செலுத்தியதாம்.. சமீபத்தில் விளையாட்டு வீரர்களின் நலன் காக்கும் போர்வையில் கவுன்சிலில் நடந்த பணமோசடி விவகாரம் பூதாகரமாகவே கவுன்சிலை தடாலடியாக மூடிய புல்லட்சாமி அரசாங்கம், வளர்ச்சி ஆணையத்தை புதுசா தொடங்கியதாம்.. இதற்கு சில சங்கங்கள் அதிரடியாக போர்க்கொடி தூக்கியுள்ளதாம்.. அதாவது கவுன்சிலில் நடந்த மோசடிகளை மறைக்கும் முயற்சியாகவே ஆணையம் தொடங்கி உள்ளதாக புலம்பி வருகிறார்களாம்.. இதனால் வீரர்களுக்கும், சங்கங்களுக்கும் எந்த பயனுமில்லை. பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ள நிலையில், அதே நபர்கள் ஆணையத்தில் பணியை தொடர இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதால் கொந்தளிப்பில் உள்ளார்களாம் குறிப்பிட்ட வீரர், வீராங்கனைகளின் நல விரும்பிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியில் மாவட்ட தலைமை பதவி கிடைத்த பிறகும் புலம்பி வருகிறாராமே புதிய தலைவர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் மலராத கட்சியில் கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. ஏற்கனவே மாவட்ட தலைவராக இரண்டு முறை இருந்த செல்வத்தின் மாற்றுப்பெயர் கொண்டவருக்கு, மூன்றாவது முறையாகவும் அதே பதவி வழங்கப்பட்டது. இதற்கு மூத்த நிர்வாகிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவர் மீது தேசிய, மாநில தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் பறந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து இவரது பதவி பறிக்கப்பட்டு, லிங்கசாமியின் பெயர் கொண்டவருக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டு இருக்கு.. ஆனாலும், லிங்கசாமி தரப்பிலோ அல்லது அவரது ஆதரவாளர்கள் தரப்பிலோ கொஞ்சம் கூட உற்சாகமில்லையாம்.. காரணம், செல்வத்தின் மாற்றுப்பெயர் கொண்டவர் கைதான் தற்போது வரை ஓங்கியுள்ளதாம்.. நிர்வாகிகள் இவரது பேச்சை மட்டும்தான் கேட்கின்றனராம்… கூட்டம் நடத்துவது உள்பட கட்சியின் முக்கிய முடிவுகள் எல்லாமே, பழைய தலைவர் சொல்படிதான் நடக்கிறது. அப்புறம் எதற்காக இந்த பதவியென புதிய தலைவர் புலம்பி வருகிறாராம்… ஆனால், அவரது புலம்பல் மாநில தலைமைக்கு எட்டாது. காரணம், மாநில தலைமையின் தீவிர விசுவாசியாச்சே இந்த பழைய தலைவர் என்கின்றனர் ஆதரவாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாவட்ட பதிவாளர்கள் கூட்டத்தில் பிறந்த நாளுக்கு 8 கிராம் தங்க நாணயம், மாதாமாதம் ஒரு லட்சம் கப்பம் கட்ட வேண்டும் என உத்தரவு போட்டிருக்காராமே பெண் துணை அதிகாரி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலூர் மண்டல பதிவுத்துறையில் இளவரசி பெயரை பாதியாக கொண்டு பணியாற்றும் பெண் துணை அதிகாரி ஒருத்தர் அனைத்து மாவட்ட பதிவாளர்களையும் வைத்து நேற்று கூட்டம் நடத்தினாராம்.. அதில், எனக்கு கீழே இயங்கும் அனைத்து சார்பதிவாளர்களும் மாதம் ஒரு லட்சம் தரவேண்டும். அதனை மாவட்ட பதிவாளர்கள் அனைத்து சார்பதிவாளர்களிடமும் தெரிவித்து விடுங்கள்.. மாவட்ட வாரியாக கலெக்சன் செய்ய ஒரு சார்பதிவாளரை நான் அறிவித்து அவர்கள் மூலம் எனக்கு வந்துவிடவேண்டும். மேலும் மாவட்ட பதிவாளர்களும் மாதாமாதம் எனக்கு தரவேண்டும். 62 சார்பதிக அலுவலக அதிகாரிகள் தலா ஒரு லட்சம் வசூலித்து தரவேண்டும். மதிப்பு நிர்ணயம் கூடுதலாக போட்டு எனக்கு அப்பீல் அனுப்புங்கள்.. நான் இடத்தை பார்த்து குறைத்து மதிப்பிட ஏக்கருக்கு மூன்று லட்சம் தரவேண்டும் என்றும், அது சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தர்களின் தொலைபேசி எண்ணை எனக்கு வாங்கி தாருங்கள் என்று கறாராகவே தெரிவித்தாராம்.. மேலும் 47A(1) மதிப்பு குறைவு ஆவணங்களை எனக்கு பணம் தராமல் எந்த சார்பதிவாளர்களும் போடக்கூடாது. எனது பிறந்த நாளுக்கு எட்டுகிறாம் தங்க நாணயம் கடலூர் மண்டலத்தில் உள்ள அனைத்து நிலை அதிகாரிகளும் தரவேண்டும். திடீர் ஆய்வுக்கு சென்ற பின்னர் அந்தந்த சார்பதிவாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்கு பணம் கொடுத்து அனுப்ப வேண்டும். கடலூர் மண்டலத்தில் உள்ள 62 சார்பதிவாளர்களும் மாதாமாதம் கப்பம் கட்டியே தீரவேண்டும் என அனைத்து மாவட்ட பதிவாளர்களையும் கட்டாயப்படுத்தி தனித்தனியாக பேசி வருகிறார் என்கின்றனர் கூட்டத்தில் கலந்துகொண்ட பதிவாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புது பிரசிடெண்டுக்கு யாரும் ஆதரவு கொடுக்கலையாம், தனியாத்தான் வர்றாராம், தனியாத்தான் போறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலர் பார்ட்டியில சமீபத்துல எலக்‌ஷன் நடத்தினாங்க.. அதுல பல மாவட்டங்கள்ல புதுசா மாவட்ட பிரசிடெண்டாக நியமிச்சாங்க.. இதுல அறிவிப்பு வந்தவுடனே வெயிலூர் மாவட்டத்துல போர்க்கொடி தூக்குனாங்க.. இப்ப மலர் பார்ட்டிகள் திரும்பும் திசைக்கு ஒரு கோஷ்டியாக பிரிஞ்சிட்டாங்க.. வெயிலூர்ல தான் இப்படின்னா, கிரிவலம் மாவட்டத்துலயும் புதுசா 3 எழுத்துக்காரர் ஒருத்தரை மாவட்ட பிரசிடெண்டாக நியமிச்சாங்க.. தலைமை நியமிச்சா, நாங்க அவரை ஏத்துக்கணுமா? அப்படிங்கற போக்குல அந்த புது பிரசிடெண்டுக்கு யாரும் ஆதரவு கொடுக்கவே இல்லையாம்.. கட்சி ஆபிசுக்கே தனியாத்தான் வர்றாராம், தனியாத்தான் போறாராம்.. கட்சி ஆபிஸ்ல இருந்த கோப்புகளையும் இதுவரைக்கும் தரவே இல்லையாம். அறிமுகமே இல்லாத நபரை பிரசிடெண்டா நியமிச்சி பார்ட்டியோட வளர்ச்சியையே தலைமை தடுக்குது, அதுக்கு நாங்க ஆதரவு கொடுக்கணுமான்னு நிர்வாகிங்க கேள்வி கேட்குறாங்களாம்.. விரக்தியடைஞ்ச பிரசிடெண்டு இதையெல்லாம் நான் தலைமைக்கு புகார் சொல்றேன்னு சொல்லி வர்றாராம்.. ஏற்கனவே இலை பார்ட்டிகள் நிலைமை பல பிரிவுகளாக பிரிஞ்சு போன மாதிரி, மலர் பார்ட்டிகள் நிலைமையும் பல பிரிவுகளாக பிரிஞ்சிடுச்சுன்னு நிர்வாகிங்களே பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post மாதாமாதம் தலா ஒரு லட்சம் கப்பம் கட்டுமாறு உத்தரவு போட்ட பதிவுத்துறை பெண் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article