தர்மபுரி, மே 12: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் நேற்று பயணிகள் அலைமோதினர். மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் தர்மபுரி பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிரிவலத்திற்காக திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று தர்மபுரி மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், காலை முதலே தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. மேலும், நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் பயணிகள் எண்ணிக்கையும் அதிகமாக காணப்பட்டது. தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையொட்டி, சேலம் கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்குவதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் நிலையத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டனர்.
The post திருவண்ணாமலைக்கு செல்ல குவிந்த மக்கள் appeared first on Dinakaran.