நல்லம்பள்ளி, மே 12: நல்லம்பள்ளி அருகே தொப்பையாறு அணை கால்வாயில் குளித்த பெண்களை கேலி செய்த அகதிகள் முகாம் வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே தொப்பையாறு அணை அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக அணையில் தண்ணீர் நிரம்பியது. வெயில் காலம் தொடங்கிய நிலையில் நீர்மட்டம் குறைய தொடங்கியது. அதேவேளையில், தொப்பையாறு அணையில் இருந்து விவசாயத்திற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் கால்வாயில் பெருக்கெடுத்துச் ெசல்கிறது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதினால் நல்லம்பள்ளி, ஏலகிரி, பாளையம்புதூர், தண்டுகாரம்பட்டி மற்றும் தொப்பூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அணை கால்வாயில் குளிப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். பெண்கள் மட்டுமின்றி பள்ளி மாணவிகள் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் வருகின்றனர்.
நேற்று முன்தினம் தொப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள், உம்மியம்பட்டி அருகே கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தொப்பையாறு அணை முகாமைச் சேர்ந்த 10க்கு மேற்பட்ட வாலிபர்கள், அங்கு வந்து கேலி செய்துள்ளனர். இதனை நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த வாலிபர்கள் பெண்களை ஆபாசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொப்பையாறு அணை கால்வாயில் குளித்த பெண்களை கேலி செய்த முகாம் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வரும் காலங்களில் கால்வாயில் குளிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கால்வாயில் குளித்த பெண்களை ஈவ்டீசிங் செய்த வாலிபர்கள் appeared first on Dinakaran.