மாணிக்காபுரத்தில் எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்க கூடாது

5 hours ago 1

திருப்பூர் : மாணிக்காபுரத்தில் எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்க கூடாது என, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

எஸ்.ஆர்.நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனு:எங்களது பகுதியில் 950 குடியிருப்புகள் உள்ளன. இதற்கு அருகில் உள்ள நிறுவனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள். இதனால் அனைவரும் நொய்யல் சாலையை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் இந்த சாலையில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்து நாங்கள் போராட்டம் நடத்தினோம்.இதன் பின்னா் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அவினாசி தத்தனூர் சாவக்கட்டுப்பாளையம் ராமசாமி என்ற முதியவர் கொடுத்த மனு: எனது தந்தை வழியில் பாத்தியப்பட்ட நிலம் மற்றும் மானாவாரி பூமி ஆகியவை எங்களது ஊரில் உள்ளது. எனது தந்தை இறப்பிற்கு பிறகு எனது முழு ஸ்வாதீனத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சொத்தை பரிமாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்தேன். அப்போது சொத்து தொடர்பான சிட்டாவினை பெற சென்ற போது பட்டாக்களில் வேறு சிலர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருந்தார்.

ஆதித்தமிழர் சனநாயக பேரவை நிர்வாகிகள் கொடுத்த மனு: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சூரியநல்லூர் ஊராட்சி. மரவபாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பட்டியலின அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனா்.

இங்கு ஆழ்குழாய் வாயிலாக குடிநீர் பயன்படுத்தி வந்தனர். தற்போது குடிநீர் உப்பு அதிகமாக உள்ளது.
ஏற்கனவே இந்த பகுதிக்கு கொடுமுடி கூட்டு குடிநீர் வாரம் 2 முறை வந்தது. தற்போது வருவதில்லை. எனவே கொடுமுடி கூட்டு குடிநீர் மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருந்தனர்.

சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர்கொடுத்த மனு: திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. கட்டணங்கள் முறைப்படுத்தாத காரணத்தினால் பொதுமக்கள் ஆட்டோவில் பயணம் செய்வதற்கு கூடுதலாக கட்டணங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்டத்தில் உள்ள ஆட்டோக்களில் கட்டணத்தை முறைப்படுத்தி ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த வேண்டும். என்று கூறியிருந்தனா்.

மடத்துக்குளம் கிருஷ்ணாபுரம் நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனு: மடத்துக்குளம் தாலுகா மைவாடி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.

இதில் வீடு கட்டியும், விவசாயமும் செய்து வருகிறோம். இந்நிலையில் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் கல்குவாரி அனுமதி வாங்கியுள்ளார்.இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே குவாரி உரிமைய நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். என்று கூறியிருந்தார்.

பல்லடம் ரோடு நண்பர்கள் ஆட்டோ நல சங்கத்தினர் கொடுத்த மனு:எங்கள் சங்கத்தில் 10 பயணிகள் ஆட்டோ உள்ளது. எங்களுக்கு என நிரந்தரமாக நிறுத்தி ஓட்டுவதற்கு இடம் இல்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டுவதற்கு இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருந்தனா்.

அவினாசி கள்ளிபாளையத்தை சோ்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: வள்ளிபுரம் கிராமத்தில் 39 அருந்ததியர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை மீண்டும் வழங்கக்கோரி கடந்த மார்ச் மாதம் கொடுத்தோம்.

இந்நிலையில் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல், அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தற்போது, இந்த பட்டியலில் உள்ள 26 பேருக்கு வழங்குவதை தடை செய்ய வேண்டும். என்று கூறியிருந்தனா்.

மங்கலம் பொதுமக்கள் கொடுத்த மனு: எங்களது பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட உபயோகத்தில் உள்ள பட்டாக்கள் 30 தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் பட்டா வழங்கக்கோரி போராடி வருகிறோம். எனவே கணினி பட்டா பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருந்தனா்.

பல்லடம் மாணிக்காபுரம் பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கொடுத்த மனு: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைக்கு என தனியாக இட வசதி இல்லை. இதனால் பல்லடம் கிராமத்தில் உள்ள 8.18 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு குப்பையில் இருந்து உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபனை இருந்தால் கூறலாம் என விளம்பரம் மூலமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பகுதியில் எரிவாயு உற்பத்தி மையம் அமைக்கும் பட்சத்தில், அந்த மையத்தில் ஏற்படும் துர்நாற்றத்தால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் நாங்கள் பாதிக்கப்படுவோம். மேலும், காற்று மாசு ஏற்படும். வாயுக்கசிவு பிரச்னை ஏற்பட்டால் இன்னும் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க கூடாது. என்று கூறியிருந்தனர்.

பல்லடம் சுக்கம்பாளையம் எம்.எஸ். காலனியை சேர்ந்த முத்துசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி குடும்பத்துடன் கொடுத்த மனு: அரசு எங்களுக்கு கொடுத்த பட்டா நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தோம்.

இந்த நிலையில் கணவர் முத்துசாமிக்கு உடல்நிலை குறைவு ஏற்படவே அவர் வேலை செய்யும் கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் பணம் பெற்றோம். இரண்டு மாதங்கள் அவருக்கு மருத்துவமனையில் வெளியூரில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், பணம் தந்த கல்குவாரி உரிமையாளர் எங்கள் வீட்டை காலி செய்து, உடைமைகளை எடுத்து வெளியே வைத்துவிட்டார்.

தற்போது அந்த வீட்டில் வேறு நபர்கள் குடியிருந்து வருகிறார்கள். எங்கள் வீட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள கல்குவாரி உரிமையாளர் மீது பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை நடவடிக்கை இல்லை. எனவே இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தனர்.

திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சரவணன் கொடுத்த மனு: வெளியூர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. மாத கடைசியில் தான் வழங்கப்படும் என அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே வெளியூர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதத்தின் அனைத்து நாட்களிலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். என்று கூறியிருந்தார்.

The post மாணிக்காபுரத்தில் எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்க கூடாது appeared first on Dinakaran.

Read Entire Article